ஹைதராபாத் விமான நிலையத்தில் நாய்களை கொஞ்சி மகிழ ஏற்பாடு
ஹைதராபாத் விமான நிலையத்தில் நாய்களை கொஞ்சி மகிழ ஏற்பாடு
ADDED : ஆக 03, 2025 12:59 AM

ஹைதராபாத்: தெலுங்கானாவின் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணியரின் மன அழுத்தம், பதற்றத்தை போக்கும் வகையில், நாய்க்குட்டிகளுடன் கொஞ்சி மகிழும் சூழலை விமான நிலைய நிர்வாகம் ஏற்படுத்தி தந்துள்ளது.
தெலுங்கானாவின் ஹைதராபாதில் உள்ள ராஜிவ்காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு, ஆண்டுதோறும் 2.95 கோடி பயணியர் வருகை தருகின்றனர்.
மன அழுத்தம் இங்கு வரும் பயணியரின் பதற்றத்தைப் போக்க, விமான நிலையத்தை நிர்வகிக்கும் ஜி.எம்.ஆர்., குழுமம் சார்பில் நாய்க்குட்டிகளுடன் விளையாடி மகிழும் சூழலை உருவாக்கி தந்துள்ளது.
விமான நிலையத்தின் அமைதியான சூழலை அனுபவிக்கும் வகையில், 'நாய்களால் சிகிச்சை' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்காக, பயிற்சி அளிக்கப்பட்ட நான்கு நாய்கள் மற்றும் அதன் பயிற்றுநர்களுடன் விமான நிலையத்தின் உள்நாடு மற்றும் வெளிநாடு புறப்பாடு இடங்களில் நிறுத்தப்படுவர்.
விமானத்தில் ஏறும் இடைப்பட்ட நேரத்தில், பயணியரின் மன அழுத்தம், பதற்றமான சூழலைப் போக்கும் வகையில், விமான நிலைய வளாகத்தில் நாய்களுடன் தங்கள் நேரத்தை செலவிட வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.
விரும்புவோர், அதை ஆவலுடன் கொஞ்சி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதேபோல் தங்கள் மொபைல் போனில் செல்பி எடுத்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
அசம்பாவிதம் இதுகுறித்து விமான நிலைய நிர்வாகம் தரப்பில் கூறுகையில், 'இச்சேவைக்கு பயணியரிடம் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்தே இதை விரிவுப்படுத்துவோம்.
'இச்சேவையில் பயன்படுத்தப்படும் நாய்களுக்கு, உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, நாய்களின் பயிற்றுநர்களும் உடனிருந்து கண்காணிப்பர்' என்றனர்.

