காலிப்பெருங்காய டப்பா; காந்தராஜை காப்பாற்றுவது யார்!
காலிப்பெருங்காய டப்பா; காந்தராஜை காப்பாற்றுவது யார்!
UPDATED : செப் 18, 2024 04:24 PM
ADDED : செப் 18, 2024 10:13 AM

சென்னை: நடிகைகளை பற்றி ஆபாசமாக, அருவருக்கத்தக்க வகையில் பேசிய டாக்டர் காந்தராஜ் மீது எப்போது கைது நடவடிக்கை பாயும், இன்னும் அவரை காப்பாற்றுவது யார் என்ற கேள்விகள் முளைக்க ஆரம்பித்துள்ளன.
குற்றச்சாட்டுகள்
கேரள திரையுலகில் ஹேமா கமிட்டி பெரிய புயலை கிளப்பியது. அங்குள்ள நடிகைகளுக்கு திரைத்துறையில் நேரும் பாலியல் தொந்தரவுகள், அத்துமீறல்களை வெளிச்சம் போட்டு காட்டியது. பல முன்னணி நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வெடித்து கிளம்ப மல்லுவுட்டே ஆடி போனது.
விமர்சகர்
பாலியல் தொந்தரவு விவகாரம் அங்கு மட்டும் இல்லை, தமிழ், தெலுங்கு திரையுலகிலும் இருக்கிறது என்று நடிகைகள் ராதிகா, விசித்திரா, குஷ்பு உள்ளிட்ட பலரும் பொதுவெளியில் பேசினர். சினிமா நடிகைகள், அவர்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் ஊடகங்களிலும் முன்னிலை பிடிக்க, சினிமா மற்றும் அரசியல் விமர்சகராக யூடியூப் சேனல்களில் பரபரப்பாக பேசி வரும் டாக்டர் காந்தராஜ், தன் பங்குக்கு ஒரு பேட்டி அளித்திருந்தார்.
அட்ஜஸ்மெண்ட்
அவர் அந்த பேட்டியில், 'சினிமாவில் இதுபோன்ற சம்பவங்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் என்று பெயர். அப்படி அட்ஜஸ்மெண்ட் செய்து கொள்ளாத நடிகைகளே இல்லை. ஏதோ கேரவன் என்ற ஸ்டைல் வந்த பின்னர் தான் பாலியல் தொந்தரவுகள் இருக்கிறது என்று அர்த்தம் இல்லை' என்று கருப்பு வெள்ளை சினிமா வெளியான காலத்தில் உள்ள முக்கிய நடிகர்கள், நடிகைகள் பற்றியும் பட்டியல் வாசித்தார். முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதாவையும் அவர் விட்டு வைக்கவில்லை.
விசாகா
சினிமா வாய்ப்பு, அட்ஜஸ்ட்மெண்ட் என்று காந்தராஜ் உளறிக்கொட்டிய விவகாரம் வெளியாகி கடும் விமர்சனங்களை எழுப்பியது. 'ஆபாசமாக, அருவருக்கத்தக்க வகையில் பேசுகிறார்' என்று பலரும் கொந்தளித்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் சினிமா விசாகா கமிட்டி தலைவர் நடிகை ரோகிணி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்து இருந்தார்.
சம்மன்
அவரின் புகாரின் பேரில் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின்னர் காந்தராஜ் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். 'ஒரு சில நாட்களில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் கைது நடவடிக்கை பாயும்' என்று எச்சரித்து போலீசார் சம்மன் அனுப்பியதாக கூறப்படுகிறது.
கைது எங்கே?
செப்டம்பர் 5ம் தேதி ஒரு யூடியூப் சேனலில் காந்தராஜின் பேட்டி ஒளிபரப்பானது. அடுத்த ஒருசில நாட்களில் இந்த விவரம் வைரலானது. கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து தான் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகாராக சென்றிருக்கிறது. 'பழைய நடிகைகள், இப்போதும் பீல்டில் உள்ள நடிகைகள், நடிகர்கள் பற்றி கொச்சையாக பேசியவர் மீது ஒரு கைது நடவடிக்கை கூட இதுவரை இல்லையே, இது எப்படி சாத்தியம்' என்று கேள்விகளை பலரும் எழுப்ப ஆரம்பித்து உள்ளனர்.
ஜெயலலிதா பற்றி
காந்தராஜ் ஜெயலலிதா பற்றி பேசியதெல்லாம் எழுதவே முடியாதவை. தாறுமாறாக ஜெயலலிதா பற்றி அவர் பேசிய வீடியோ வெளியாகியும், அவரை தெய்வமாக வணங்குவதாக சொல்லிக்கொள்ளும் அ.தி.மு.க.,வினருக்கு எந்த ரோஷமும் வராதது ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது.
அ.தி.மு.க., தரப்பில் நடவடிக்கை இல்லாமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணத்தை விவரம் அறிந்தோர் கூறுகின்றனர். காந்தராஜ், முன்னாள் சபாநாயகரும், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சர் பதவி வகித்தவருமான ராஜாராமின் உடன் பிறந்த சகோதரர். அந்தக்காலத்து அரசியல்வாதிகள் பலருக்கும் அறிமுகமானவர். அரசு மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சேலம் மாவட்டம் தான் அவரது பூர்விகம்.அந்த தொடர்புகள் காரணமாகத்தான் அவரை, அ.தி.மு.க.,வினர் கண்டும் காணாமல் இருப்பதாக, கட்சியினர் பேசிக்கொள்கின்றனர்.
அதிகார பின்புலம்
'இதுவே சாதாரண வெகுஜனம் பேசியிருந்தால் உடனடி கைது, பின்னர் வழுக்கி விழுந்து மாவுக்கட்டு சம்பவம் தான் முதலில் அரங்கேறி இருக்கும். அரசியல் மற்றும் அதிகார பின்புலம் உள்ளதால் தான் இப்படி பேசியும் கைது நடவடிக்கை ஸ்வாகா ஆகி இருக்கிறது' என்றும் அவர்கள் விமர்சித்து இருக்கின்றனர்.
பேச்சு தொடரும்
டாக்டர் காந்தராஜ் ஏதோ முதல் முறை இப்படி பேசியதாக பலரும் நினைக்கின்றனர். ஆனால் கடந்தாண்டே இதேபோன்று, இன்னும் சொல்லப்போனால்... இதைவிட இன்னமும் கொச்சையாக பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பேசினார். அவரின் பேட்டி அப்போதும் கடும் கண்டனங்களை உருவாக்கியது. ஆனாலும், அவர் பேசுகிறார், பேசிக் கொண்டே இருக்கிறார், இன்னமும் பேசுவார் என்பதையே இது போன்ற காவல்துறையின் 'கைது இல்லாத சமாளிப்பு' நடவடிக்கைகள் காட்டுகின்றன என்கின்றனர் சாமானியர்கள்.

