கரசேவகர் ஸ்ரீகாந்த் பூஜாரி கைது விவகாரம் காங்., - பா.ஜ., உறுப்பினர்கள் வாக்குவாதம்
கரசேவகர் ஸ்ரீகாந்த் பூஜாரி கைது விவகாரம் காங்., - பா.ஜ., உறுப்பினர்கள் வாக்குவாதம்
ADDED : பிப் 15, 2024 05:16 AM

பெங்களூரு : கரசேவகர் ஸ்ரீகாந்த் பூஜாரி கைது செய்யப்பட்ட விவகாரத்தில், கர்நாடக சட்டசபையில் ஆளுங்கட்சி, பா.ஜ., உறுப்பினர்கள் இடையில், கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கர்நாடகா சட்டசபையில் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக நேற்று நடந்த விவாதம்:
எதிர்க்கட்சி தலைவர் அசோக்: ஹாவேரி ஹனகல்லில் முஸ்லிம் பெண், ஏழு பேர் கும்பலால் கூட்டாக கற்பழிக்கப்பட்டார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உதவாமல், அவருக்கு 500 ரூபாய் கொடுத்து, போலீசார் அனுப்பி வைத்து உள்ளனர்.
பெண்ணின் கணவர் அளித்த புகாரால், அந்த சம்பவம் வெளியே வந்தது. பெங்களூரு நந்திமலையிலும் காதலனுடன் சென்ற இளம்பெண் கற்பழிக்கப்பட்டார். அந்த சம்பவம் அப்படியே மூடிமறைக்கப்பட்டது. இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
காங்கிரஸ் எம்.எல்.ஏ., சீனிவாஸ் மானே: பெண் கற்பழிக்கப்பட்டது எனது தொகுதியில் தான். தவறு செய்தவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். அந்த பெண்ணை லாட்ஜில் வைத்து, இளைஞர் கும்பல் தாக்கிய போதே, லாட்ஜ் உரிமையாளர் போலீசுக்கு தகவல் கொடுத்திருந்தால், தவறு நடந்திருக்காது.
நமக்கு ஏதாவது பிரச்னை வரும் என்று, லாட்ஜ் உரிமையாளர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, எங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர்.
அவர் எம்.எல்.ஏ.,வாக உள்ள ஷிகாவி தொகுதியில் நிறைய போலீஸ் நிலையங்கள் உள்ளன. மற்ற தொகுதிகளில் குறைந்த போலீஸ் நிலையங்களே உள்ளன.
அசோக்: காங்கிரஸ் ஆட்சியில் எம்.எல்.ஏ.,க்களுக்கே பாதுகாப்பு இல்லை. மைசூரு எம்.எல்.ஏ., தன்வீர் செய்ட் கத்தியால் குத்தப்பட்டார். அகண்ட சீனிவாசமூர்த்தி வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது. மங்களூரில் குக்கர் குண்டுவெடிப்பு நடத்தியவரை, எங்கள் சகோதரர் என்கிறார், துணை முதல்வர் சிவகுமார்.
அப்படி என்றால் கற்பழிக்கப்பட்ட முஸ்லிம் சகோதரியின் கதை என்ன? ஹூப்பள்ளியில் ராமர் ஜென்மபூமிக்காக போராடிய, கரசேவகர் ஸ்ரீகாந்த் பூஜாரியை, 31 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்து உள்ளனர்.
அதுவும் அயோத்தி ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு. இப்படி செய்தவன் மூலம், கரசேவகர்களை அரசு மிரட்ட பார்க்கிறது.
(அப்போது குறுக்கிட்ட அமைச்சர்கள் எம்.பி.பாட்டீல், பிரியங்க் கார்கே, எம்.எல்.ஏ.,க்கள் வினய் குல்கர்னி, சீனிவாஸ் மானே உள்ளிட்டோர், ஸ்ரீகாந்த் பூஜாரி கரசேவகர் இல்லை. அவர் ஒரு கிரிமினல். மட்கா சூதாட்டம் ஆடியவர். பல்வேறு வழக்குகள் அவர் மீது உள்ளது என்று கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கோஷம் எழுப்பி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.)
அசோக்: ஸ்ரீகாந்த் பூஜாரி மீது தவறு இருக்கட்டும். ஆனால் ராமர் கோவில் திறந்த பின்னர், அவரை கைது செய்து இருக்கலாம். கோவில் திறப்புக்கு முன்பே அவரை, கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன.
அமைச்சர் பிரியங்க் கார்கே: கரசேவகர் என்றால் என்ன என்று எங்களுக்கு தெரியவில்லை. முடிந்தால் அதற்கு விளக்கம் சொல்லுங்கள்.
அசோக்: அயோத்தியில் ராமர் கோவில் கட்டியது நாங்கள் தான்.
(அப்போது பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்பினர்)
அசோக்: மாண்டியா கெரேகோடு கிராமத்தில், கொடி கம்பம் அமைத்து, ஹனுமன் கொடி ஏற்ற பஞ்சாயத்து உறுப்பினர்கள் 18 பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
கிராம மக்கள் தங்கள் சொந்த பணத்தில், கொடி கம்பம் அமைத்து, ஹனுமன் கொடி ஏற்றினர். இதற்கு அரசு ஒரு ரூபாய் கூட தரவில்லை.
இரவோடு இரவாக ஹனுமன் கொடியை அகற்றினர். இதுபற்றி அறிந்ததும் நான் மாண்டியாவுக்கு சென்றேன். கெரேகோடு கிராமத்திற்கு பக்கத்தில் சென்றதும், எனது பாதுகாப்புக்கு வந்த வாகனம், பழுது ஆனது.
இதனால் அந்த வாகனத்தை ஓரம்கட்டிவிட்டு, நான் எனது காரில் பயணத்தை தொடர்ந்தேன். அந்த இடைவெளியில், அவசர, அவசரமாக விதிகளை கடைப்பிடிக்காமல், தேசிய கொடி ஏற்றி உள்ளனர்.
தேசிய கொடியை அவமதித்தது, இவர்கள் தான். நாங்கள் இல்லை. அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதை, காங்கிரசால் பொறுக்க முடியவில்லை. ஹனுமன், ராமர் மீது இவர்களுக்கு வெறுப்பு.
(இதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நாங்களும் ராமர் பக்தர்கள் தான் என்று கோஷம் எழுப்பினர்)

