கைது வாரன்ட் பிறப்பிப்பு.. கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா விளக்கம்
கைது வாரன்ட் பிறப்பிப்பு.. கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா விளக்கம்
ADDED : டிச 23, 2024 04:15 AM

பெங்களூரு : ஊழியர்களுக்கு பி.எப்., பணம் செலுத்தாமல் மோசடி செய்ததாக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது பற்றி, கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, 38. பெங்களூரு புலிகேசி நகரில் உள்ள 'செஞ்சுரிஸ் லைப் ஸ்டைல் பிராண்ட்' என்ற நிறுவன இயக்குனராக இருந்துள்ளார். இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு செலுத்த வேண்டிய 23.36 லட்சம் ரூபாய் பி.எப்., தொகையை செலுத்தாமல் மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 4ம் தேதி கே.ஆர்., புரம் மண்டல பி.எப்., நிதி மற்றும் மீட்பு அதிகாரி சடாக் ஷரி கோபால் ரெட்டி, ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பித்தார்.
இதுதொடர்பாக ராபின் உத்தப்பாவின் இன்ஸ்டாகிராம் பதிவு: கடந்த 2018 - 2019ல் 'ஸ்ட்ராபெரி லென்சேரியா பிரைவேட் லிமிடெட், செஞ்சுரிஸ் லைப் ஸ்டைல் பிராண்ட், பெர்ரி பேஷன் ஹவுஸ்' நிறுவனங்களில் பணம் முதலீடு செய்தேன். இதற்காக அந்த நிறுவனங்கள் என்னை இயக்குனராக நியமித்தன. ஆனாலும், அந்த நிறுவனத்தின் நிர்வாக செயல் அதிகாரி பதவி எதுவும் வகிக்கவில்லை.
தொழில் முறை கிரிக்கெட் வீரர், வர்ணனையாளர் என்பதால், அந்த நிறுவனங்களின் செயல்பாடுகளில் பங்கேற்க முடியாது. இதனால், நிறுவன விவகாரங்களில் நான் தலையிடவில்லை.
கடன் வடிவில் நான் முதலீடு செய்த பணத்தை, அந்த நிறுவனங்கள் திருப்பித் தர மறுத்துவிட்டதால், இயக்குனர் பதவியை ராஜினாமா செய்தேன். அந்த நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளேன்.
ஆனால், நான் இயக்குனராக இருந்த செஞ்சுரிஸ் லைப் ஸ்டைல் பிராண்ட் நிறுவனம், அதன் ஊழியர்களுக்கு பி.எப்., பணம் வழங்காமல் மோசடி செய்ததாக, என் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த நிறுவனத்தில் எனக்கு எந்த பங்கும் இல்லை என, என் வழக்கறிஞர் மூலம் ஆவணங்களை கொடுத்துள்ளேன்.
வரும் நாட்களில் என் சட்ட ஆலோசகர் இப்பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பார். என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டின் உண்மை தன்மையை சரிபார்த்து, செய்திகளை வெளியிடும்படி ஊடகங்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

