ADDED : பிப் 04, 2025 12:59 AM
பாலக்காடு : யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், அலோபதி மருத்துவத்தை அவமதிக்கும் வகையில் விளம்பரத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியதால், உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கும் உள்ளானது.
இந்நிலையில், கேரளாவில் புதிதாக பதஞ்சலி நிறுவனம் மற்றும் பாபா ராம்தேவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பதஞ்சலியின் துணை நிறுவனமான திவ்யா பார்மசி வெளியிட்ட விளம்பரத்துக்கு எதிராக பாலக்காடு நீதிமன்றத்தில் கேரள மருந்து துறை வழக்கு தொடர்ந்துள்ளது.
அதில், கடந்த 1954ம் ஆண்டு மருந்தியல் சட்ட விதிகளுக்கு எதிராக, மக்களை தவறாக வழி நடத்தும் வகையில், குறிப்பிட்ட சில நோய்களை குணமாக்கும் மருந்து மற்றும் பாலியல் மருந்து உள்ளிட்டவை தொடர்பாக விளம்பரம் வெளியிட்டதாக திவ்யா பார்மசிக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த 1ம் தேதியன்று நேரில் ஆஜராகும்படி பாபா ராம்தேவ், ஆச்சார்யா பாலகிருஷ்ணாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாததால் பாபா ராம்தேவ், பாலகிருஷ்ணா ஆகியோருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்டை பிறப்பித்த பாலக்காடு நீதிமன்றம், பிப்ரவரி 15ம் தேதியன்று நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

