கொலைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
கொலைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
ADDED : ஜன 25, 2024 05:10 PM

புதுடில்லி: டில்லியில், கொலைக்குற்றவாளிகளை போலீசார் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி கைது செய்துள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் இல்லாமல் எதுவும் நடக்காது என்ற அளவுக்கு மாறிவிட்டது. தினமும் புதுப்புது கண்டுபிடிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இதன் உச்சமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் வந்துள்ளது.
இதனை பயன்படுத்தி நெட்டிசன்கள் பல விஷயங்களை செய்து வருகின்றனர். பலர் நல்லதுக்கு பயன்படுத்தினாலும், சிலர் கெட்ட விஷயங்களுக்கும் பயன்படுத்துவது உண்டு. ஆனால், டில்லி போலீசார் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் கொலைக்குற்றவாளிகளை கைது செய்த நிகழ்வு அரங்கேறி உள்ளது.
டில்லியின் கீதா காலனி மேம்பாலம் அருகே 30 வயது மதிக்கத்தக்க நபர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார், சோதனை செய்தனர். அதில் அவரைப்பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இறந்த நிலையில் அவரது புகைப்படத்தை நகரின் பல இடங்களில் ஒட்டினர். 30 பேர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால், இறந்தவர் பற்றிய ஒரு தகவல் கூட கிடைக்கவில்லை.
இதனையடுத்து செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இறந்தவர் புகைப்படத்தில் சில மாற்றங்களை செய்தனர். அந்த நபர் கண்களை திறந்து இருப்பது போலவும், லேசாக சிரிப்பது போலவும் மாற்றினர். மேலும் இறந்த நிலையில் முகம் சுருங்கி கிடந்த நிலையில் அதிலும் மாற்றம் செய்தும், பின்னால் வாகனங்கள் நிற்பது போலவும் சித்தரித்து புகைப்படம் எடுத்து மீண்டும் நகரின் பல இடங்களில் ஒட்டினர்.
இதற்கு பலன் கிடைத்தது. இந்த படத்தை பார்த்து, இறந்தவரின் குடும்பத்தினர் போலீசை தொடர்பு கொண்டனர். அதில், இறந்தவர் ஹிதேந்தர்(35) எனவும், ஆடிட்டிங் நிறுவனத்தில் பணியாற்றியதும் தெரியவந்தது. கடந்த 2ம் தேதி வீட்டை விட்டு சென்றவர் பிறகு வீடு திரும்பவில்லை. அவரின் மனைவி உறவினர்களிடம் 9ம் தேதி தான் கணவர் காணாமல் போனது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், ஹிதேந்தர் கடைசியாக ஜேம்ஸ்(32), ராக்கி (35) மற்றும் பிரியங்கா(27) ஆகியோருடன் இருந்தது தெரிந்தது. 3 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை செய்ததில், ஹிதேந்தருடன் பணப்பிரச்னை காரணமாக 3 பேருக்கும் முன்விரோதம் இருந்ததும், அவர்கள் ஹிதேந்தருக்கு மதுபானம் கொடுத்து, பிறகு கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.