செயற்கை நுண்ணறிவு தொழில் சந்தைகளை மாற்றி அமைக்கும்; அமைச்சர் ஜெய்சங்கர்
செயற்கை நுண்ணறிவு தொழில் சந்தைகளை மாற்றி அமைக்கும்; அமைச்சர் ஜெய்சங்கர்
ADDED : ஜூன் 30, 2026 05:33 PM

புதுடில்லி: செயற்கை நுண்ணறிவு, தானியங்கி மயமாக்கலில் ஏற்படும் முன்னேற்றங்கள், பல துறைகளில் உள்ள தொழில் சந்தைகளை மாற்றி அமைக்கும் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறி உள்ளார்.
டில்லியில் மனிதவள கூட்டாண்மை மையத்தில் அவர் பேசியதாவது;
இப்போது உலகம் வெகுவாக மாறி வருகிறது. குறிப்பாக கண்டங்களில் மக்கள்தொகை எண்ணிக்கை மாறிக் கொண்டே இருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவு தொழில்துறைகள் மறுவடிவாக்கம் பெற்று வருகின்றன.
செயற்கை நுண்ணறிவு, தானியங்கி மயம், பசுமை மாற்றம் என பல திறன்கள் பொருளாதாரத்தை மறுவரையறை செய்கின்றன. ஆனால், சுகாதாரம், விவசாயம், கட்டுமானம் போன்ற துறைகளில் கடந்த காலங்களில் நம் முன்னே இருந்த சவால்கள் அப்படியேதான் உள்ளன.
இந்த பின்னணியில் திறன்கள் மற்றும் அவற்றின் பரிமாற்றம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மனித வளம் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய காரணிகளில் ஒன்றாக மாறி இருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு, தானியங்கி மயமாக்கலில் ஏற்படும் முன்னேற்றங்கள், பல துறைகளில் உள்ள தொழில் சந்தைகளை மாற்றி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில தொழில்கள் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு இலக்காக கூடும். புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும்.
இவ்வாறு ஜெய்சங்கர் உரையாற்றினார்.
