பஞ்சாபில் எதற்கு ஆம்ஆத்மி தனித்து போட்டி: அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்
பஞ்சாபில் எதற்கு ஆம்ஆத்மி தனித்து போட்டி: அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்
ADDED : பிப் 18, 2024 05:17 PM

புதுடில்லி: பஞ்சாபில் ஆம்ஆத்மி தனித்து போட்டியிடுவது எதற்கு? என்பது குறித்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் அளித்துள்ளார்.
பஞ்சாபில், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. அடுத்த சில மாதங்களில் லோக்சபா தேர்தல் வர உள்ளது. பஞ்சாபில் உள்ள 13 இடங்களிலும், சண்டிகரில் உள்ள ஒரு இடத்திலும் ஆம் ஆத்மி போட்டியிட உள்ளது என டில்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார். கூட்டணியில் இடம்பெற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த முடிவு, இண்டியா கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டது.
தொகுதி பங்கீடு
இந்நிலையில், பஞ்சாபில் ஆம்ஆத்மி தனித்து போட்டியிடுவது எதற்கு? என்பது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: வரும் லோக்சபா தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் தனித்து களம் காணலாம் என்பது காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து எடுத்த முடிவு தான். இது குறித்து எந்த மோதலும் எங்களுக்குள் இல்லை. டில்லியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே தொகுதிபங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. டில்லியில் கூட்டணி இல்லாவிட்டால் பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்பு எளிதாகி விடும். இவ்வாறு அவர் கூறினார்.