லோக்சபா தேர்தல் நெருங்குவதால் அதிகாரிகள் இடமாற்றம் துவக்கம்
லோக்சபா தேர்தல் நெருங்குவதால் அதிகாரிகள் இடமாற்றம் துவக்கம்
ADDED : பிப் 18, 2024 02:27 AM
பெங்களூரு, :லோக்சபா தேர்தலை முன்னிட்டு, நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் பணிபுரியும் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது.
மத்திய பா.ஜ., அரசின் பதவிக் காலம், மே மாதம் நிறைவு பெறுவதால், அதற்கு முன்பே லோக்சபா தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
அரசு அதிகாரிகள் ஒரே இடத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வந்தால், ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்படுவர் என்பதால், ஒவ்வொரு தேர்தலின்போதும் தற்காலிக இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில், லோக்சபா தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால், கர்நாடகாவில் மாநில அரசு அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக இடமாற்றம் செய்யும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
முதற் கட்டமாக, முக்கிய பொறுப்பில் உள்ள பெங்களூரு மாநகராட்சி மற்றும் மாநிலத்தின் 10 மாநகராட்சிகளில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் நேற்று முன்தினம் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், நகராட்சி துறையின் கீழ் வருகின்ற, மாநிலத்தின் வெவ்வேறு நகராட்சிகள், டவுன்சபை, பேரூராட்சிகளில் புணிபுரியும், 91 உயர் அதிகாரிகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அனைவரையும் தாமதமின்றி இடமாற்றம் செய்யப்பட்ட இடத்தில் பணியில் சேரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், லோக்சபா தேர்தல் பணிகள் முழுமையாக முடிந்த பின், முன்பு வகித்த இடத்தில் பணியில் சேர்ந்து கொள்ளலாம் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த கட்டங்களில், போலீஸ் அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகளும் இடமாற்றம் செய்வதற்கு பட்டியல் தயார் செய்யப்பட்டுஉள்ளன.