கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் ஆஷா ஊழியர்கள் திட்டவட்டம்
கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் ஆஷா ஊழியர்கள் திட்டவட்டம்
ADDED : ஜன 09, 2025 06:32 AM

பெங்களூரு: 'ஊதிய உயர்வு உட்பட, பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை, போராட்டம் தொடரும்' என, ஆஷா ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
தங்களின் மாத ஊதியத்தை 15,000 ரூபாயாக உயர்த்த வேண்டும், ஊதிய பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். பணியில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு, மேற்கு வங்கத்தை போன்று ஐந்து லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், பணியின்போது உடல்நிலை பாதிக்கப்பட்டால், மூன்று மாத ஊதியம் வழங்க வேண்டும், ஆண்டுக்கு ஒரு முறை ஊழியர்களுக்கு, மருத்துவ பரிசோதனை செய்து, ஏதாவது நோய்கள் இருந்தால் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆஷா ஊழியர்கள் நேற்று முன் தினம், காலவரையற்ற போராட்டத்தை துவக்கினர்.
ஆஷா ஊழியர்களின் போராட்டத்தை நிறுத்த, அரசும், சுகாதாரத்துறையும் செய்த முயற்சி பலனளிக்கவில்லை. இவர்களின் போராட்டம், நேற்று இரண்டாவது நாளாக நீடித்தது.
மாநிலத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், ஆஷா ஊழியர்கள் பெங்களூரின் சுதந்திர பூங்காவில் குவிந்துள்ளனர். நேற்றைய போராட்டத்தில், லோக் ஆயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, முன்னாள் அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார் உட்பட, பலர் பங்கேற்றனர்.
'ஒவ்வொரு முறை போராட்டத்தின்போதும், கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கும் அரசு, அதன்பின் வாக்கு தவறுகிறது. எனவே இம்முறை கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை, போராட்டத்தை நிறுத்தமாட்டோம்' என, ஆஷா ஊழியர்கள் அறிவித்துள்ளனர். நேற்று முன் தினமும் நேற்றிரவும் சாலையிலேயே உறங்கினர்.
நான்கைந்து நாட்களுக்கு தேவையான மாற்று உடை, சால்வை, போர்வைகளுடன் சுதந்திர பூங்காவில் முகாமிட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஓய்வு பெற்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே அளித்த பேட்டி:
வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வது, அரசின் கடமை. குறைந்தபட்ச ஊதிய விதிகளை மீறும் உரிமை அரசுக்கு இல்லை. போராட்டம் நடத்த விடாமல், வெறும் உறுதி மொழிகளை அளித்து, காலம் கடத்துகிறது.
பல ஆண்டுகளாக கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. போராட்டம் நடத்துவதை தவிர, ஆஷா ஊழியர்களுக்கு வேறு வழியில்லை. இவர்களின் போராட்டம் வெற்றி அடைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

