ஆஷா ஊழியர்கள் போராட்டத்தால் அரசுக்கு நெருக்கடி! சுதந்திர பூங்காவில் தொடரும் பெண்கள் முற்றுகை
ஆஷா ஊழியர்கள் போராட்டத்தால் அரசுக்கு நெருக்கடி! சுதந்திர பூங்காவில் தொடரும் பெண்கள் முற்றுகை
ADDED : பிப் 04, 2025 06:43 AM

கர்நாடகாவில் பல்வேறு தரப்பினரும், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒருவர் பின் ஒருவராக போராட்டத்தில் குதிக்கின்றனர். சர்க்கரை ஆலைகளிடம் கரும்பு பாக்கியை பெற்று தரும்படி, விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதன்பின் ஊதிய பாக்கிக்காக போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
அங்கன்வாடி ஊழியர்கள் ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு, சலுகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து, பெங்களூரின் சுதந்திர பூங்காவில் நான்கைந்து நாட்கள், இரவு, பகலாக போராட்டம் நடத்தினர். அவர்களின் போராட்டத்தை போலீசாரின் மூலம் ஒடுக்க, அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
'அங்கன்வாடி ஊழியர்கள் இடத்தை காலி செய்ய வேண்டும். இல்லா விட்டால் வழக்கு பதிவு செய்யப்படும்' என, போலீசார் மிரட்டினர். இதற்கு ஊழியர்கள் பணியவில்லை. அரசும், 'போராட்டத்தை கைவிடா விட்டால், மகளிர் சுய உதவிக்குழு சார்பில், அங்கன்வாடிகள் நடத்தப்படும்' என, எச்சரித்தது. ஆனாலும், அங்கன்வாடி ஊழியர்கள் அசரவில்லை.
அரசுக்கு கெடு
அதன்பின் அவர்களாகவே மனம் மாறி, மார்ச் 7ம் தேதிக்குள், தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என, அரசுக்கு காலக்கெடு விதித்து, போராட்டத்தை தற்காலிகமாக முடித்து கொண்டனர். அரசும் நிம்மதி பெருமூச்சு விட்டது. ஆனால் அரசின் நிம்மதி நீடிக்கவில்லை. சுகாதார துறையின் கட்டுப்பாட்டில் பணிபுரியும் ஆஷா ஊழியர்கள் நேற்று, போராட்டத்தில் குதித்தனர்.
கர்நாடகாவின் 31 மாவட்டங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான ஆஷா பெண் ஊழியர்கள் சுதந்திர பூங்காவில் குவிந்துள்ளனர். 15,000 ரூபாய் ஊதியம் நிர்ணயிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து, போராட்டம் நடத்துகின்றனர். அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி அமர்ந்துள்ளனர்.
சுகாதார துறையின் கட்டுப்பாட்டில், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆஷா ஊழியர்களின் பணி, கிராமப்புறங்களில் மகத்தானது.
கர்ப்பிணியர், குழந்தை பெற்ற பெண்களுக்கு தேவையான மருந்துகளை, வீடுகளுக்கே கொண்டு சேர்க்கின்றனர். இவர்களது போராட்டத்தால், இப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, ஆஷா ஊழியர்கள் கூறியதாவது:
இன்று (நேற்று) காலை 11:00 மணிக்கு, போராட்டத்தை துவங்கினோம். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆஷா ஊழியர்கள் பெங்களூரின் சுதந்திர பூங்காவுக்கு வந்துள்ளனர். ஊதிய உயர்வு உட்பட எங்களின் கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்துகிறோம்.
இரண்டு ஆண்டுகள்
மாநிலத்தில் காங்கிரஸ் அரசு வருவதற்கு முன், ஆஷா ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தது. ஆனால் அரசு அமைந்து, இரண்டு ஆண்டுகளை நெருங்குகிறது. இதுவரை எங்களின் கோரிக்கையை பொருட்படுத்தவில்லை.
ஊதிய உயர்வு, தரமான டேப் வழங்க வேண்டும். அரசின் மற்ற துறைகளின் ஊழியர்களுக்கு கிடைக்கும் சலுகைகள், எங்களுக்கும் கிடைக்க வேண்டும். எங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை, நாங்கள் சுத்திர பூங்காவை விட்டு, செல்ல மாட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொடரும் போராட்டங்களால், காங்., அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.