ADDED : மார் 15, 2024 10:35 PM

தாவணகெரே: ''வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின், அனைத்து கட்சியிலும் குழப்பம் ஏற்படுவது சகஜம் தான். கட்சிக்கு எதிராக யாரும் போட்டி வேட்பாளராக களமிறங்க மாட்டார்கள்,'' என, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் நம்பிக்கை தெரிவித்தார்.
தாவணகெரேயில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள். ரேணுகாச்சார்யாவும், ரவீந்திரநாத்தும் கட்சியின் மூத்த தலைவர்கள். இருவரிடமும் பேசுவேன்.
கட்சிக்காக, 45 ஆண்டுகள் உழைத்தவர் ஈஸ்வரப்பா. எம்.எல்.ஏ., அமைச்சர், துணை முதல்வர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர். ஹாவேரியில் அவரது மகனுக்கு சீட் கிடைக்காதது குறித்து அவரை சமாதானம் செய்வேன்; அனைத்தும் சரியாகிவிடும். கட்சி மேலிட தலைவர்கள் ஏற்கனவே அவரிடம் பேசிவிட்டனர். தேர்தலில் எந்த குழப்பமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

