டாக்டர் மஞ்சுநாத்துக்கு விருது அரசுக்கு அசோக் வலியுறுத்தல்
டாக்டர் மஞ்சுநாத்துக்கு விருது அரசுக்கு அசோக் வலியுறுத்தல்
ADDED : பிப் 01, 2024 07:17 AM
பெங்களூரு: 'ஜெயதேவா இதய நோய் மருத்துவமனை இயக்குனராக, பல ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற மஞ்சுநாத்துக்கு, 'கர்நாடக ரத்னா' விருது வழங்க வேண்டும்' என, கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் அசோக் வலியுறுத்தினார்.
'எக்ஸ்' சமூக வலைதளத்தில், நேற்று அவர் கூறியிருப்பதாவது:
பெங்களூரின், ஜெயதேவா இதய நோய் மருத்துவமனை இயக்குனராக 16 ஆண்டுகள் பணியாற்றிய டாக்டர் மஞ்சுநாத், நேற்று ஓய்வு பெற்றுள்ளார்.
மாநிலத்தின் பிரபலமான டாக்டரான அவரது ஓய்வு வாழ்க்கை, சுகமாக இருக்க வேண்டும் என, வாழ்த்துகிறேன்.
ஏழை நோயாளிகளின் நலனுக்காக, 'ட்ரீட்மென்ட் பர்ஸ்ட், பேமன்ட் நெக்ஸ்ட்' என்ற திட்டத்தை செயல்படுத்தி, ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மஞ்சுநாத், ஏழைகளை பொறுத்த வரை கடவுளாக திகழ்ந்தார் என்றால், அது மிகையல்ல.
அரசு மருத்துவமனை என்றால், முகத்தை சுழிக்கும் இந்த காலத்தில், எந்த தனியார் மருத்துவமனைக்கும் குறையாத வகையில், ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில், உயர்தரமான சிகிச்சை வழங்கினார்.
மருத்துவமனையை இந்த அளவுக்கு தரம் உயர்த்திய பெருமை, இவரையே சாரும்.
கர்நாடகாவின் பெருமைக்குரிய இவரது சாதனையை அடையாளம் கண்டு, 'கர்நாடக ரத்னா' விருது வழங்க வேண்டும் என, முதல்வர் சித்தராமையாவிடம் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.