மசூதி கல்வெட்டில் அசோகா சின்னம் சேதம்; ஜம்மு - காஷ்மீரில் பரபரப்பு
மசூதி கல்வெட்டில் அசோகா சின்னம் சேதம்; ஜம்மு - காஷ்மீரில் பரபரப்பு
ADDED : செப் 07, 2025 05:53 AM

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில், ஹஸ்ரத்பால் மசூதியில் புனரமைப்பு பணிகள் முடிந்து வைக்கப்பட்ட கல்வெட்டில் இடம்பெற்ற, தேசிய சின்னமான, 'அசோகா' சின்னம் சேதப்படுத்தப்பட்ட சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டு கட்சியின் ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள ஸ்ரீநகர் மாவட்டத்தில், பிரபல ஹஸ்ரத்பால் மசூதி உள்ளது. சமீபத்தில் இங்கு புனரமைப்பு பணிகள் நடந்தன.
இதையடுத்து, புதுப்பிக்கப்பட்ட கல்வெட்டு மசூதியில் வைக்கப்பட்டது. அதில், அசோகா தேசிய சின்னம் இடம் பெற்றது.
இதையறிந்த அப்பகுதி மக்கள், ஹஸ்ரத்பால் மசூதிக்கு வந்து, கல்வெட்டில் இடம்பெற்ற அசோக சின்னத்தை சேதப்படுத்தினர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, அடையாளம் தெரியாத நபர்கள் மீது, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அசோகா சின்னம் சேதப்படுத்தப்பட்டதை வரவேற்ற முதல்வர் ஒமர் அப்துல்லா, “மத வழிபாட்டு தலத்தில், அசோக சின்னத்தை வைக்க வேண்டிய அவசியம் என்ன? மத உணர்வுகளை புண்படுத்தக் கூடாது. இந்த விவகாரத்தில் பொது பாதுகாப்பு சட்டம் பயன்படுத்தப்பட்டது ஏன்?” என, கேள்வி எழுப்பினார்.
அசோக சின்னம் சேதப்படுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, “ஹஸ்ரத்பால் மசூதி கல்வெட்டில் இருந்த அசோக சின்னம் சேதப்படுத்தப்பட்டது கண்டனத்துக்குரியது. இது வருத்தம் அளிக்கிறது.
''அசோகா சின்னம் நம் இறையாண்மை மற்றும் தேசிய பெருமையின் சின்னம். இது போன்ற செயல்கள் நம் தேசிய உணர்வுகளைப் புண்படுத்துகின்றன. இதை பொறுத்துக்கொள்ள முடியாது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.