ADDED : பிப் 06, 2025 11:12 PM

பெங்களூரை சேர்ந்தவர் அஸ்வினி பொன்னப்பா, 35. இவருக்கு இரண்டரை வயது இருக்கும்போதே, அவரது தாயார் 'பேட்மின்டன் பேட்டை' வழங்கினார். இவரின் தந்தை பொன்னப்பா, இந்திய ஹாக்கி அணிக்காக விளையாடியவர். இவரது மாமா, மாநில அளவிலான கிரிக்கெட் வீரர்.
இவருக்கு 8 வயது இருக்கும் போது, பெங்களூரில் உள்ள பேட்மின்டன் அகாடமியில் சேர்ந்தார். பேட்மின்டனில் அவருக்கு இருந்த ஆர்வத்தால், விரைவில் அதில் தேர்ச்சி பெற்றார். 2001ல் தனது முதல் தனி நபர் பிரிவிலும்; 2004, 2005ல் சப் ஜூனியர் இரு பெண்கள் பிரிவிலும் தேசிய பட்டத்தை கைப்பற்றினார். 2006, 2007ல் ஜூனியர் பெண்கள் பிரிவில் தேசிய பட்டம் வென்றார்.
முதல் தங்கம்
தெற்கு ஆசிய விளையாட்டு போட்டியில் 2010ல் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். அதுபோன்று 2010ல் நடந்த காமன்வெல்த் போட்டியில், பெண்கள் இருவர் பிரிவில் மற்றொரு வீராங்கனை ஜுவாலா குட்டாவுடன் அஸ்வினி பொன்னப்பா இணைந்து இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் பெற்று வரலாறு படைத்தனர்.
கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக்கில், ஜப்பானிடம் தோல்வி அடைந்தனர். 2014 காமன்வெல்த் போட்டியில், இறுதி சுற்றில், மலேஷியாவிடம் தோல்வி அடைந்ததால், வெள்ளி பதக்கம் வென்றனர்.
ஒலிம்பிக் - 2016க்கு முன்னதாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அஸ்வினி பொன்னப்பா, தன்னால் முடிந்த அளவு விளையாடினார். இந்த வேளையில் ஜுவாலா குட்டாவுடனான இணைப்பு முறிந்தது.
தனது பால்ய நண்பரும், தொழிலதிபதிருமான கரன் மேடப்பாவை 2017ல் திருமணம் செய்து கொண்டார். ஆனாலும், தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வந்தார். அதன்பின், 2018ல் காமன்வெல்த் போட்டியில், சிக்கி ரெட்டி என்பவருடன் இணைந்து அஸ்வினி பொன்னப்பா விளையாடி, வெண்கல பதக்கம் வென்றார். மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், 2020ல் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியவில்லை.
மன உணர்வு
பாரிஸ் ஒலிம்பிக்கில் 2024ல் ஆஸ்திரேலியாவுடன் நடந்த தகுதி சுற்றில் இந்திய அணி தோல்வி அடைந்தது. போட்டிக்கு முன்னதாக, அஸ்வினி பொன்னப்பா கூறுகையில், ''இது தான் என் கடைசி ஒலிம்பிக் போட்டி. இது உணர்வு ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இச்சூழ்நிலையை மீண்டும் சந்திக்க முடியாது. இது எளிதானதும் அல்ல. நீங்கள் இளமையாக இருந்தால் தாங்கிக் கொள்ளலாம். இவ்வளவு காலம் விளையாடியதால், இனி என்னால் அதை தாங்க முடியாது,'' என்றார்
- நமது நிருபர் -.

