ஹிந்துக்கள் ஒன்றோடு நிறுத்தக்கூடாது; 2 - 3 குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும்: அசாம் முதல்வர் 'அட்வைஸ்'
ஹிந்துக்கள் ஒன்றோடு நிறுத்தக்கூடாது; 2 - 3 குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும்: அசாம் முதல்வர் 'அட்வைஸ்'
UPDATED : ஜன 01, 2026 01:35 AM
ADDED : ஜன 01, 2026 12:22 AM

குவஹாத்தி: ''அசாம் மாநிலத்தில் ஹிந்து மக்கள் தொகையின் வளர்ச்சி குறைந்து வருவதால், ஹிந்து தம்பதியர் ஒரு குழந்தையோடு நிறுத்தாமல், குறைந்தது இரண்டு, மூன்று குழந்தைகளாவது பெற்றெடுக்க வேண்டும்,'' என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா வலியுறுத்தியுள்ளார்.
வடகிழக்கு மாநிலமான அசாமில், முஸ்லிம்கள் எண்ணிக்கை 40 சதவீதத்தை நெருங்கி வருவதாக சமீபத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியிருந்தார்.
எதிர்கால தலைமுறை
இந்நிலையில், மக்கள் தொகை அமைப்பு மாறி வருவது குறித்து, சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறியுள்ளதாவது:
சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகம் உள்ளது. ஹிந்துக்களிடையே குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. எனவே தான் ஹிந்துக்களை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள சொல்கிறேன்.
ஒரு குழந்தையோடு நிறுத்தாமல், குறைந்தது இரண்டு குழந்தைகள் பெற்றெடுங்கள். முடிந்தவர்கள் மூன்று குழந்தைகள் கூட பெற்றெடுக்கலாம்.
முஸ்லிம்கள் ஏழு, எட்டு குழந்தைகள் பெற்றுக்கொள்கின்றனர். இப்படியே சென்றால், அசாமில் அவர்களின் மக்கள் தொகை 40 சதவீதத்துக்கு மேல் செல்லும்.
ஹிந்துக்களின் மக்கள் தொகை 35 சதவீதத்துக்கு கீழே செல்வதை எதிர்கால தலைமுறையினர் சந்திக்க நேரிடும்.
நம் அண்டை நாடான வங்கதேசம், அடிக்கடி வடகிழக்கு இந்தியாவை பிரித்து, தங்களுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றது.
கோரிக்கை
போர் செய்யத் தேவையில்லை. அவர்களின் மக்கள் தொகை 50 சதவீதத்தை தாண்டினால் தானாகவே அது நடந்துவிடும்.
அசாம் மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், முஸ்லிம்களுக்கு 48 சட்டசபை தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என, அக்கட்சியிடம் கோரிக்கை வைத்தார்.
அவரை இன்னமும் கட்சியை விட்டு நீக்கவில்லை. ஏனென்றால், முஸ்லிம் ஓட்டுகளை நம்பியே காங்கிரஸ் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

