வன்முறையை துாண்டியதாக ராகுல் மீது வழக்கு அசாம் முதல்வர் சர்மா உத்தரவு
வன்முறையை துாண்டியதாக ராகுல் மீது வழக்கு அசாம் முதல்வர் சர்மா உத்தரவு
ADDED : ஜன 24, 2024 01:11 AM

குவஹாத்தி,''பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையில், போலீசார் அமைத்த தடுப்புகளை உடைக்க மக்களை துாண்டிவிட்டு, நக்சல் தந்திரங்களை ராகுல் கட்டவிழ்த்துவிடுகிறார். அவர் மீது வழக்கு பதிவு செய்யும்படி போலீஸ் டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டு உள்ளேன்,'' அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் முதல், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை வரையில், காங்., - எம்.பி., ராகுல் மேற்கொண்டுள்ள பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை, அசாமில் இருந்து மேகாலயாவுக்குள் சென்று, நேற்று மீண்டும் அசாம் மாநிலத்துக்குள் நுழைந்தது.
அனுமதி
நாளை வரை அசாமில் யாத்திரை தொடர்கிறது. இந்த யாத்திரை அசாமின் குவஹாத்தி நகருக்குள் நுழைய மாநில அரசு ஏற்கனவே அனுமதி மறுத்து இருந்தது.
பொது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வண்ணம், புறநகர் பகுதி வழியாக யாத்திரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், ராகுல் தலைமையிலான காங்., தொண்டர்கள், குவஹாத்தி நகரத்துக்குள் யாத்திரை மேற்கொள்ள நேற்று முயன்றனர். இதனால், போலீசார் இரண்டு இடங்களில் தடுப்பு அமைத்தனர்.
அந்த தடுப்புகளை அடித்து நொறுக்கிவிட்டு குவஹாத்தி நகருக்குள் நுழைய காங்., தொண்டர்கள் முயற்சித்தனர். இதில் போலீசார் உட்பட பொதுமக்கள் சிலரும் காயம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி, யாத்திரையை திட்டமிட்ட பாதைக்கு திருப்பி விட்டனர். அப்போது புறநகர் பகுதியில் பஸ் மீது ஏறி நின்று, காங்., தொண்டர்கள் மத்தியில் ராகுல் உரையாற்றினார்.
அஞ்ச வேண்டாம்
அப்போது அவர் பேசியதாவது:
பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவும் இதே பாதையில் தான் பயணித்தார். அவருக்கு அளிக்கப்பட்ட அனுமதி நமக்கு மறுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக நாங்கள் பலகீனமானவர்கள் என நினைத்துவிடாதீர்கள்.
எங்கள் சிங்கங்கள் தடுப்புகளை உடைத்து எறிந்துள்ளனர். அசாமில் பா.ஜ., ஆட்சியை துாக்கி எறிந்துவிட்டு நாம் விரைவில் ஆட்சி அமைப்போம். காங்., தொண்டர்கள் யாருக்கும் அஞ்ச வேண்டாம்.
ஒரு தனி நபர் சொல்லும் உத்தரவுகளுக்கு அடிபணிந்த போலீசார், தங்கள் பணியை செய்கின்றனர். நாங்கள் அவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஊழலில் திளைக்கும் அசாம் முதல்வருக்கு எதிரானவர்கள். அவரை எதிர்த்து தான் நாங்கள் சண்டையிட்டு கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, அசாம் - மேகாலயா எல்லையில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலை வளாகத்தில் மாணவர்களிடையே ராகுல் உரை நிகழ்த்துவதாக இருந்தது. பல்கலை நிர்வாகம் அனுமதி மறுத்ததை தொடர்ந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவு:
ராகுல் மற்றும் காங்., தலைவர் ஜிதேந்திரா சிங் மக்களை துாண்டிவிட்டு போலீசார் அமைத்த தடுப்புகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.
நக்சல் தந்திரங்களை இங்கு கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
அசாம் போலீஸ் அதிகாரியை கொல்லும்படி தொண்டர்களை அவர்கள் துாண்டிவிட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும்படி டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டு உள்ளேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

