ஜல்லிக்கட்டை போன்று எருமைச்சண்டை நடத்த சட்டத்திருத்தம்: அசாம் சட்டசபையில் நிறைவேற்றம்
ஜல்லிக்கட்டை போன்று எருமைச்சண்டை நடத்த சட்டத்திருத்தம்: அசாம் சட்டசபையில் நிறைவேற்றம்
ADDED : நவ 27, 2025 09:02 PM

கவுகாத்தி: தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அளிக்கப்பட்ட விலக்கைப் போல, அசாமில் பாரம்பரியமாக நடக்கும் எருமைச் சண்டை போட்டியை விலங்குகள் மீதான வதை தடுப்புச் சட்டம் இருந்து நீக்கும் வகையில் கொண்டு வரப்ப்டட சட்ட திருத்தம் சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
அசாமில் ஆண்டுதோறும் ஜனவரி மாத மத்தியில் எருமைச்சண்டை போட்டி பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2014 ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இந்தப்போட்டி நிறுத்தப்பட்டது. இதன் பிறகு, இப்போட்டிகளை நடத்தும் வகையில் மாநில அரசு விதிமுறைகளை கொண்டு வந்தது. ஆனால், இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கவுகாத்தி ஐகோர்ட், மாநில அரசின் விதிமுறைகளை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து இந்தப் போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் அங்கு ஒலித்து வந்தது.
இந்நிலையில், இந்தப் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக 1960 ம் ஆண்டு விலங்குகள் மீதான வதை தடுப்புச் சட்டத்தில் இருந்து எருமைச் சண்டை போட்டியை நீக்குவது என மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான சட்டத்திருத்த மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. விவாதத்துக்கு பிறகு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
கடந்த 2014ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தமிழகத்திலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம் நடந்தது. இதனையடுத்து ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில் தமிழக சட்டசபையில் கடந்த 2017 ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. அதில், தெரிவிக்கப்பட்ட விதிமுறைகளின்படி தற்போது ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.
இதனை பின்பற்றி, அசாம் அரசும் தற்போது எருமைச்சண்டை போட்டிகளை நடத்துவதற்கு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது.

