அசாமின் வைணவ துறவி பிறப்பிடம் ரூ.227 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு: கலாசார, ஆன்மிக சுற்றுலா தலமாக திறப்பு
அசாமின் வைணவ துறவி பிறப்பிடம் ரூ.227 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு: கலாசார, ஆன்மிக சுற்றுலா தலமாக திறப்பு
ADDED : டிச 30, 2025 01:31 AM

குவஹாத்தி: அசாமின் புகழ்பெற்ற வைணவத் துறவியான ஸ்ரீமந்த சங்கரதேவா பிறந்த இடம், 227 கோடி ரூபாய் மதிப்பில் சர்வதேச தரத்தில் புனரமைக்கப்பட்டுள்ளது. கலாசார, ஆன்மிக சுற்றுலா தலமாக மேம்படுத்தப்பட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
வடகிழக்கு மாநிலமான அசாமில் நாகோன் மாவட்டத்தில் உள்ள படத்ரவாதான் பகுதியை, 227 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைத்து கலாசார மற்றும் ஆன்மிக சுற்றுலா தலமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
'குரு ஆசனம்'
அசாமின் வைணவத் துறவியான ஸ்ரீமந்த சங்கரதேவாவின் பிறந்த இடம் என்பதால் அவரது பெயரில் இந்தப் பகுதியை புனரமைக்கும் திட்டத்திற்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2020ல் அடிக்கல் நாட்டினார்.
இதைத் தொடர்ந்து, 2021 - 22 மாநில பட்ஜெட்டில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான பா.ஜ., அரசு இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கியது.
இதன்படி, ஸ்ரீமந்த சங்கரதேவாவின் வாழ்க்கை, லட்சியங்கள் மற்றும் கலைப் பாரம்பரியம், மாநிலத்தின் பரந்த கலாசார மரபுகளை பிரதிபலிக்கும் வகையில் இந்தப் பகுதி புனரமைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்ரீமந்த சங்கரதேவாவின் பெயரில் புனரமைக்கப்பட்டுள்ள இப்பகுதியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று திறந்து வைத்தார்.
அதன்பின், குரு ஆசனம் என அழைக்கப்படும் துறவியின் இருக்கை அமைந்துள்ள பிரதான கட்டடத்தையும் அவர் சுற்றிப் பார் த்தார்.
புனரமைக்கப்பட்டுள்ள இந்த வளாகம் முழுதும், ஒரு மரத்தின் வடிவில், கட்டமைக்கப்பட்டுள்ளது. அதன் மையத்தில், ஸ்ரீமந்த சங்கரதேவாவின் இருக்கையான 'குரு ஆசனம்' அமைக்கப்பட்டுள்ளது.
கண்காட்சி
அதில் இருந்து மற்ற கட்டடங்களும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட கிளைகளைப் போல் நீண்டுள்ளன. இது, அசாமிய கட்டடக்கலை கூறுகள் மற்றும் கலாசார பாரம்பரியத்தை முன்னிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்கட்டடத்தின் ஒரு பகுதியாக பகவான் கிருஷ்ணரின் வாழ்க்கையை சித்தரிக்கும் ஒரு கண்காட்சியும், அசாமிய பாரம்பரிய நாட்டுப்புற கலையான பாவோனாவை அரங்கேற்றும் அரங்குகளும் இடம்பெற்றுள்ளன.
இதுதவிர சுற்றுலா பயணியர் வசதிக்காக, விருந்தினர் இல்லங்கள், பிரார்த்தனை கூடங்கள், வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா பேசியதாவது:
அசாமின் ஆன்மிக மற்றும் கலாசார பாரம்பரியத்தை பாதுகாப்பதில் எங்களின் உறுதிப்பாட்டை இந்தத் திட்டம் எடுத்துரைக்கிறது. படத்ரவா தான் பகுதியில் உள்ள சத்ரா நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியதன் மூலம், இந்நிலத்தின் புனிதத்தையும், பாரம்பரியத்தையும் நாங்கள் மீட்டெடுத்துள்ளோம்.
சர்வதேச தரத்தில் இந்த இடம் புனரமைக்கப்பட்டுள்ளது. எதிர்கால சந்ததியினர் ஸ்ரீமந்த சங்கரதேவாவை பற்றி அறிந்து கொள்ள இந்த இடம் பெரிதும் உதவும். இவ்வாறு அவர் பேசினார்.

