டிரைவர் மீது தாக்குதல் வழக்கு, பாலியல் தொல்லை அம்பலம்
டிரைவர் மீது தாக்குதல் வழக்கு, பாலியல் தொல்லை அம்பலம்
ADDED : மே 25, 2024 05:03 AM
கோனனகுண்டே, : ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. உதவி செய்வது போல நடித்து, இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், காதலன் தாக்கியது தெரிய வந்துள்ளது.
பெங்களூரு, கோனனகுண்டேயில் வசிப்பவர் ராஜு, 45. ஆட்டோ டிரைவர். கடந்த 5ம் தேதி காலையில், கோனனகுண்டே போலீஸ் நிலையத்தில், ஒரு புகார் அளித்தார்.
வாடகை வீடு
அந்த புகாரில், 'சிக்கமகளூரை சேர்ந்த காதல் ஜோடி முகமது அன்சார், 23, திரிஷா, 20 ஆகியோருக்கு, என் வீட்டில் தங்க இடம் கொடுத்தேன். என்னை தாக்கி பணத்தை, கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனர்' என்று கூறி இருந்தார்.
அதன்பேரில் கோனனகுண்டே போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். நேற்று முன்தினம் இரவு, முகமது அன்சார் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாயின. முகமது அன்சாரும், திரிஷாவும் கடந்த 4ம் தேதி காலையில், வீட்டை விட்டு வெளியேறி, பெங்களூரு வந்தனர்.
ஜே.பி., நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, சேத்தன் என்பவருக்காக இருவரும் காத்திருந்தனர். ஆனால் சேத்தன் வரவே இல்லை.
இரவு 10:30 மணிக்கு ஆட்டோவில் அங்கு வந்த ராஜு, காதல் ஜோடியிடம் பேச்சு கொடுத்துள்ளார். 'நண்பரை நம்பி வந்தோம்; அவர் வரவில்லை' என, முகமது அன்சார் கூறியுள்ளார்.
பாலியல் தொல்லை
இதையடுத்து ராஜு, காதல் ஜோடியிடம், 'என்னிடம் வாடகை வீடு உள்ளது. அந்த வீடு பிடித்திருந்தால் அங்கு தங்கிக் கொள்ளுங்கள்' என கூறி, கோனனகுண்டேவுக்கு அழைத்து வந்துள்ளார்.
வீட்டிற்குச் செல்லும் வழியில், ராஜு மது அருந்தி உள்ளார். வீட்டிற்குச் சென்றதும் முகமது அன்சாரையும் கட்டாயப்படுத்தி, மது குடிக்க வைத்து உள்ளார்.
பின்னர் திரிஷாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். அவர் எதிர்ப்புத் தெரிவித்ததால், 'கொலை செய்து விடுவேன்' என, கத்தியை காட்டி மிரட்டி உள்ளார்.
சுதாரித்துக் கொண்ட முகமது அன்சார், கத்தியை பறித்து ராஜுவின் நெற்றி, கையில் வெட்டினார். பின்னர் அங்கிருந்து முகமது அன்சாரும், திரிஷாவும் தப்பித்துள்ளனர். மெஜஸ்டிக் சென்று அங்கிருந்து, சிக்கமகளூரு சென்றதும் தெரிந்தது.
கொலை முயற்சி வழக்குப்பதிவாகி இருந்ததால், முகமது அன்சாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீசார் சிறையில் அடைத்தனர். பொய் புகார் அளித்த, ஆட்டோ டிரைவர் ராஜுவும் கைது செய்யப்பட்டார்.
