பொதுமக்கள் கருத்து கேட்க சட்டசபை குழுவுக்கு உத்தரவு
பொதுமக்கள் கருத்து கேட்க சட்டசபை குழுவுக்கு உத்தரவு
ADDED : ஜூலை 15, 2025 10:22 PM

சண்டிகர்:புனித நுால்களை இழிவுபடுத்துவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் மசோதா குறித்து, பொதுமக்கள் கருத்தைக் கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய, சட்டசபை தேர்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பஞ்சாப் சட்டசபை சிறப்புக் கூட்டம் நடந்தது. நேற்று முன் தினம் நடந்த கூட்டத்தில், புனித நூல்களை இழிவுபடுத்தோர் மற்றும் கடவுளை அவமதிப்போருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும், மசோதாவை, முதல்வர் பகவந்த் மான் தாக்கல் செய்தார்.
தண்டனை
இந்த மசோதா மீது நேற்று விவாதம் நடந்தது. அதைத் தொடர்ந்து, இந்த மசோதா குறித்து பொதுமக்கள் கருத்தைக் கேட்டு, ஆறு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க சட்டசபை தேர்வுக் குழுவுக்கு, சபாநாயகர் குல்தார் சிங் சந்த்வான் உத்தரவிட்டார். இந்தக் குழுவில், அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர்.
குரு கிரந்த் சாஹிப், பகவத் கீதை, பைபிள் மற்றும் குர்ஆன் உள்ளிட்ட புனித நூல்களை அவமதிப்பவர்களுக்கு ஆயுள் தண்டனை உட்பட கடும் தண்டனை வழங்க இந்த மசோதாவில் அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.
இந்தச் சட்டம் நிறைவேறினால், புனித நூல்களை இழிவுபடுத்தோருக்கு, 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும், 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
அதேபோல, புனித நுாலை அவமதிக்க முயற்சி செய்தாலே, மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
அதேபோல, 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். இந்தக் குற்றத்துக்கு உதவி செய்வோருக்கு அவர்களின் குற்றத் தன்மைக்கு ஏற்ற தண்டனை வழங்கப்படும்.
புனித நுால்களையோ அல்லது அதன் பகுதியையோ அவமதித்தல், சேதப்படுத்துதல், அழித்தல், சிதைத்தல், நிறமாற்றம் செய்தல், எரித்தல் ஆகியவை குற்றம் என இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
பவுஜாவுக்கு அஞ்சலி
விபத்தில் மரணம் அடைந்த மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் பவுஜா சிங்குக்கு, பஞ்சாப் சட்டசபையில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
சிறப்புக் கூட்டத்தொடரின் இறுதி நாளான நேற்று, அஞ்சலி தீர்மானத்தை அமைச்சர் ரவ்ஜோத் சிங் முன்மொழிந்தார்.
சபாநாயகர் குல்தார் சிங் சந்த்வான், மூத்த மராத்தான் ஓட்டப்பந்தய வீரரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவரது சாதனைகள் குறித்து பேசினார்.
கடந்த, 1911ல் விவசாயக் குடும்பத்தில் பிறந்த பவுஜா சிங், சர்வதேச அளவில் பல சாதனைகளைப் படைத்தவர். கடந்த, 1990ல் பிரிட்டனில் வசித்தார். அடுத்த சில ஆண்டுகளில் பஞ்சாபில் உள்ள தன் சொந்த கிராமத்துக்கு திரும்பினார். கடந்த, 2012ம் ஆண்டு லண்டன் மாநகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு ஜோதி ஏந்திச் சென்றார்.