l கர்நாடக சட்டசபை கூட்டத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நிறைய பேர் கலந்து கொள்ளவில்லை. இதனால் பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தன. எதிர்க்கட்சி தலைவர் அசோக் அமர்ந்து இருக்கும் முதல் இருக்கையில், அசோக்கை தவிர வேறு யாரும் இல்லை. ஆளுங்கட்சி முதல் வரிசையில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களை காணவில்லை.
l பெல்தங்கடி பா.ஜ., -- எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சாவுக்கு அடிக்கடி, மொபைல் போனில் அழைப்பு வந்தது. இதனால் அவர் உள்ளேயும், வெளியேயும் சென்று வந்தார்.
l பா.ஜ., -- எம்.எல்.ஏ.,க்கள் சுரேஷ்குமாரும், சிவராம் ஹெப்பாரும் ஏதோ பேசி கொண்டே இருந்தனர்.
l எதிர்க்கட்சி தலைவர் அசோக் பேசி கொண்டு இருந்த போது, காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ., நயனா அடிக்கடி குறுக்கிட்டு பேசினார். இதனால் கோபம் அடைந்த பா.ஜ., எம்.எல்.ஏ., அரக ஞானேந்திரா, சபாநாயகர் காதரை பார்த்து, நயனாவை கண்டிக்கும்படி கூறினார். அப்போது சபாநாயகர் காதர், 'நயனா முதல்முறை எம்.எல்.ஏ., ஆகி உள்ளார். ஆர்வமிகுதியால் பேசுகிறார். நீங்கள் சீனியர், எல்லாம் சகித்து கொள்ள வேண்டும்' என்று, அரக ஞானேந்திராவிடம் கூறினார்.
l பா.ஜ., எம்.எல்.ஏ., குருராஜ் கந்திஹோல், சட்டசபைக்கு வேஷ்டி, சட்டை அணிந்து வந்து இருந்தார்.
l எனது பாதுகாப்பு வாகனம் ஒரு முறை பழுதாகி விட்டது என்று, சபாநாயகர் காதர் கூறியதை கேட்டு, அவையில் கடும் சிரிப்பலை எழுந்தது.
l 'இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் முதல்வர் மாற்றம் நடக்கும் என்கிறார்கள். நீங்கள் பதவியில் இருப்பீர்களா' என்று, சபாநாயகர் காதரை பார்த்து, பா.ஜ., - எம்.எல்.ஏ., சுனில்குமார் கேட்டதும், அவையில் சிரிப்பலை எழுந்தது.
l எலஹங்கா பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத் கேள்விக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் நாகேந்திரா பதிலளித்து பேசுகையில், ''எலஹங்கா தொகுதி, ஹெசரகட்டா பேரூராட்சி, மாவள்ளிபுரத்தில், 100 ஏக்கர் பிரதேசத்தில் சகல வசதிகள் கொண்ட விளையாட்டு நகரம் அமைக்கப்படும். 60 ஏக்கர் நிலம் வழங்க, வருவாய் துறை ஒப்புகொண்டுள்ளது. 40 ஏக்கர் நிலம் மற்றவர்களிடம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
l மேலுகோட்டை சர்வோதயா கர்நாடக கட்சி - எம்.எல்.ஏ., தர்ஷன் புட்டண்ணய்யா கேள்விக்கு, சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா பதிலளித்து பேசுகையில், ''பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுடில்லியில் போராட்டம் நடத்த சென்ற கர்நாடக விவசாயிகளை போபாலில் கைது செய்திருப்பது சரியில்லை. போராட்டம் நடத்துவது அரசியல் அமைப்பின்படி சரி தான். அவர்களை பத்திரமாக மீட்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

