ADDED : மார் 13, 2026 02:15 AM
கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், சட்டசபை தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்த தலைமை தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து தேர்தல் கமிஷனின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும், இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அடுத்தடுத்த கூட்டங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும். இங்கு, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த வேண்டும் என ஆளும் திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருடனான சந்திப்பின் போது வலியுறுத்தின.
பாதுகாப்பு படை அதிகாரிகள் உட்பட பல்வேறு சமூக அமைப்பினரும் இதே கருத்தை பரிந்துரைத்தனர். இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்துவதால், வன்முறை சம்பவங்களை தடுக்க முடியும் என நம்பப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
