சட்டசபை செய்தி: பொருளாதாரத்தை சீரழிக்கும் சித்தராமையா முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டு
சட்டசபை செய்தி: பொருளாதாரத்தை சீரழிக்கும் சித்தராமையா முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டு
ADDED : பிப் 16, 2024 07:26 AM

பெங்களூரு: பொருளாதாரத்தை முதல்வர் சித்தராமையா சீரழித்து வருவதாக, சட்டசபையில், முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றஞ்சாட்டினார்.
கர்நாடகா சட்டசபையில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று, முன்னாள் முதல்வர் குமாரசாமி பேசியதாவது:
ஐந்து வாக்குறுதிகள் மூலம், கர்நாடகா மக்களின் நிதி சக்தி அதிகரித்து உள்ளதாக, காங்கிரஸ் அரசு கூறுகிறது. ஒருபக்கம் வாக்குறுதி அளித்துவிட்டு, இன்னொரு பக்கம் அனைத்துப் பொருட்கள் மீதான, விலையை உயர்த்தி வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் 'மன்மோகன்மிக்ஸ்' பற்றி, நான் முன்பு பேசி உள்ளேன். பிரதமர் மோடியின் 'மோடினோமிக்ஸ்' பற்றியும் எனக்கு தெரியும். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் 'அபேனோமிக்ஸ்' பற்றியும் அறிந்து இருக்கிறேன்.
* 'சித்தனாமிக்ஸ்'
ஆனால் ,வாக்குறுதி பெயரில் வரிகளை உயர்த்தி, மக்களின் ரத்தத்தை உறிஞ்சும், சித்தராமையாவின் 'சித்தனாமிக்ஸ்'சை நேரில் பார்க்கிறேன். மாநிலத்தின் பொருளாதாரத்தை சித்தராமையா சீரழித்து வருகிறார். 'என் வரி என் உரிமை' என்று கூறி, டில்லியில் போராட்டம் நடத்தினர். 'என் தண்ணீர் என் உரிமை' என்று கூறி, பாதயாத்திரை நடத்தினர். காவிரி நீர் இன்னும், தமிழகத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது.
மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. வாக்குறுதிகளை நிறைவேற்ற பணம் இல்லை. ஆனால் எம்.எல்.ஏ.,க்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கி, மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கின்றனர். இதில் 9 பேருக்கு முதல்வர் அலுவலகத்தில் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
'பிராண்ட் பெங்களூரு' என்றனர். ஒரு மாற்றமும் நடக்கவில்லை.
* நல்லிணக்கம்
'பாரத்' அரிசி ஒரு கிலோ 29 ரூபாய்க்கு வழங்கி, கஜானாவை மத்திய அரசு வீணடிப்பதாக அமைச்சர் முனியப்பா சொல்கிறார். அரிசி கொடுப்பதாக மக்களை ஏமாற்றும் நீங்கள், பாரத் அரிசி பற்றி பேசலாமா?
விதான் சவுதா மேற்கு வாசலில், 'அரசு வேலை, கடவுள் வேலை' என்று, முன்னாள் முதல்வர் கெங்கல் ஹனுமந்தய்யா எழுதினார். நாங்கள் சொன்னபடி செய்கிறோம் என்று, இப்போதைய அரசும் எழுதிக் கொள்ளட்டும். இது எப்போதும் நிலைத்து இருக்கும்.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையில் நல்லிணக்கம் வேண்டும். பிரதமர், முதல்வர் இடையில் நல்லுறவு வேண்டும். இதற்கு நான் நல்ல உதாரணம். இரண்டு முறை முதல்வராக இருந்தேன். என்னை லாட்டரி முதல்வர் என்றனர். நான் கவலைப்படவில்லை. மத்திய அரசின் பாதுகாப்பு துறையில் உள்ள நிலம், வளர்ச்சிப் பணிகளுக்கு தேவைப்பட்டது.
கடந்த 2018 ல் பாதுகாப்பு அமைச்சராக இருந்த, நிர்மலா சீதாராமனிடம் பேசினேன். இதுகுறித்து பேச விதான் சவுதாவுக்கு அவர் வந்தபோது, கிழக்கு வாசலுக்கு சென்று வரவேற்றேன். அந்த வாசலுக்கு சென்று வரவேற்பது, ஆசாரம் இல்லை என்றனர். எனக்கு ஆசாரம் முக்கியம் இல்லை. மாநில நலன் முக்கியம் என்றேன். மாநில நலனுக்கு முக்கியத்துவம் அளித்தவன் நான்.
இவ்வாறு அவர் பேசினார்.