ADDED : மே 24, 2025 12:16 AM

புதுடில்லி:சட்டசபையின், பொது நோக்கக் குழு கூட்ட விவாதங்களை பொதுவெளியில் வெளியிட்ட, முன்னாள் முதல்வர் ஆதிஷி மற்றும் குழு உறுப்பினர்களான ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு டில்லி சட்டசபை அலுவலகம் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
சட்டசபை பொதுநோக்கக் குழு கூட்டம், சபாநாயகர் விஜேந்தர் குப்தா தலைமையில் சமீபத்தில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில், நாட்டின் சுதந்திரப் போராட்டம், சமூக சீர்திருத்தம் மற்றும் கல்வி மறுமலர்ச்சிக்கு பங்காற்றியவர்களை கவுரவிக்கும் விதமாக வீர சாவர்க்கர், பண்டிட் மதன் மோகன் மாளவியா மற்றும் மகரிஷி தயானந்த சரஸ்வதி ஆகியோர் படங்களை டில்லி சட்டசபையில் வைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்துக்குப் பின், நிருபர்களிடம் பேசிய, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிஷி மற்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள், 'சாவித்ரிபாய் புலே படத்தை சட்டசபையில் வைக்க கோரிக்கை விடுத்தோம். ஆனால், அதை நிராகரித்து விட்டனர்'என குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், துணை சபாநாயகர் மோகன் சிங் பிஷ்ட், பா.ஜ., தலைமை கொறடா அபய் வர்மா மற்றும் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் ராஜ்குமார் பாட்டியா, திலக் ராம் குப்தா ஆகியோர், சபாநாயகர் விஜேந்தர் குப்தாவிடம் நேற்று முன் தினம் கொடுத்த புகாரில், 'பொது நோக்கக் குழு கூட்டத்தில் நடந்த விவாதங்கள் குறித்தஉண்மைகளைத் திரித்து, பொதுவெளியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,கள் பேசியுள்ளனர். இது, உரிமை மீறல் பிரச்னை. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் ஆதிஷி மற்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் குல்தீப் குமார், வீர்சிங் திங்கன் மற்றும் சுபைர் ஆகியோருக்கு சட்டசபை அலுவலகம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது. அதில், இந்த விவகாரம் குறித்து வரும் 30ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.