சிவகுமார் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு; விசாரணை 4 வாரம் தள்ளிவைத்தது கோர்ட்
சிவகுமார் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு; விசாரணை 4 வாரம் தள்ளிவைத்தது கோர்ட்
ADDED : நவ 05, 2024 05:56 AM

கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் மீதான வருமானத்துக்கும் அதிகமான சொத்துக் குவித்த வழக்கின் விசாரணையை, உச்ச நீதிமன்றம் நான்கு வாரங்கள் தள்ளிவைத்துள்ளது.
கடந்த 2013 மற்றும் 2018 வரையிலான, காங்கிரஸ் அரசில் சிவகுமார் அமைச்சராக இருந்தார். அப்போது வருமானத்துக்கும் அதிகமாக அவர் சொத்துக் குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மாநிலத்தில் கூட்டணி அரசு கவிழ்ந்து, பா.ஜ., அரசு பதவியேற்றபின், சட்டவிரோத சொத்துக் குவிப்பு வழக்கு, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, தயாரான நிலையில் 2023ல் ஆட்சி மாறியது. சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்தது.
முந்தைய பா.ஜ., அரசு, சிவகுமார் மீதான சி.பி.ஐ., விசாரணைக்கு அளித்திருந்த அனுமதியை, காங்கிரஸ் அரசு ரத்து செய்து, வழக்கை லோக் ஆயுக்தாவிடம் மாற்றியது.
காங்கிரஸ் அரசின் முடிவை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ., மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ., மேல் முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்வல் புவன் அமர்வு முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிவகுமார் தரப்பு வக்கீல் ரஞ்சித்குமார், வழக்கு தொடர்பாக பதிலளிக்க அவகாசம் கோரினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்கள் தள்ளிவைத்தனர்.
சி.பி.ஐ., விசாரணைக்கான அனுமதியை திரும்பப் பெற்ற, காங்கிரஸ் அரசின் முடிவை எதிர்த்து, விஜயபுரா பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னாலும், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இம்மனு இன்னும் விசாரணைக்கு வரவில்லை.
- நமது நிருபர் -