இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் ரூ.11.14 கோடி சொத்துக்கள் முடக்கம்; சூதாட்ட மோசடி வழக்கில் அதிரடி
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் ரூ.11.14 கோடி சொத்துக்கள் முடக்கம்; சூதாட்ட மோசடி வழக்கில் அதிரடி
ADDED : நவ 07, 2025 01:48 AM

புதுடில்லி: 'ஆன்லைன்' சூதாட்ட மோசடி வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவானுக்கு சொந்தமான, 11.14 கோடி ரூபாய் சொத்துக் களை அமலாக்கத்துறை முடக்கிது.
'ஒன் எக்ஸ் பெட்' என்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை விளம்பரப்படுத்த வெளிநாட்டு நிறுவனங்களுடன் நம் நாட்டின் பிரபலங்கள் சிலர் ஒப்பந்தம் செய்திருப்பதாக அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் மற்றும் நடிகர் சோனி சூட், நடிகை ஊர்வசி ரடேலா, திரிணமுல் முன்னாள் எம்.பி., மிமி சக்கரவர்த்தி மற்றும் வங்காள நடிகர் அன்குஷ் ஹஸ்ரா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு இந்தியாவில் அனுமதி இல்லை என தெரிந்தும், சுரேஷ் ரெய்னாவும், ஷிகர் தவானும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அமலாக்கத்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் சுரேஷ் ரெய்னாவுக்கு சொந்தமான, 6.64 கோடி ரூபாய் மதிப்புள்ள மியூச்சுவல் நிதி முதலீடு, ஷிகர் தவானுக்கு சொந்தமான, 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இந்திய பயனாளர்களின் பணத்தை பெற, ஆன்லைன் சூதாட்ட நிறுவனம், 6,000 பேரின் வங்கி கணக்குகளை வாடகைக்கு எடுத்து ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பதும் அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து அறிமுகம் இல்லாத நபர்களுக்கு வங்கிக் கணக்குகளை வாடகைக்கு விட அனுமதிப்பது, 'டெபிட் கார்டு'கள் அல்லது பணம் எடுக்கும் பிற வசதிகளை வழங்குவது சட்டப்படி குற்றம் என அமலாக்கத் துறை எச்சரித்துள்ளது.
மேலும், அதிக லாபம் தருவதாக வரும் சந்தேகத்திற்கு இடமான ஆன்லைன் விளம்பரங்களை கிளிக் செய்வதோ, 'டெலிகிராம், வாட்ஸாப்' போன்ற சமூக ஊடகங்களில் வரும் விளம்பரங்களை நம்பி முதலீடு செய்யவோ கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

