ADDED : ஜூலை 13, 2025 01:47 AM

புதுடில்லி: வான் பரப்பில் தாக்கி அழிக்கும் திறன் படைத்த, 'ஆஸ்ட்ரா' ஏவுகணை, 'சுகோய் - 30 மார்க் 1' ரக போர் விமானத்தில் இருந்து ஏவி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
வான்வழி தாக்குதல்களுக்கான, 'ஆஸ்ட்ரா' ஏவுகணையை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது. இது, வான்வழியாக 100 கி.மீ.,க்கு அப்பால் சென்று தாக்கும் திறன் உடையது.
இந்த, 'ஆஸ்ட்ரா' ஏவுகணையின் சோதனை, ஒடிஷாவின் சண்டிபூர் கடல் பகுதியில் நேற்று முன்தினம் நடந்தது.
சுகோய் - 30 ரக போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, அதிவேகமாக செலுத்தப்பட்ட இரண்டு ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்களை துல்லியமாக தாக்கி அழித்தன.
ரேடியோ அலைவரிசை தொழில்நுட்ப உதவியுடன் வடிவமைக்கப்பட்ட, 'ஆஸ்ட்ரா' ஏவுகணையின் செயல்திறன் கண்காணிக்கப்பட்டது.
'வெற்றிகரமாக நடத்தப் பட்ட இந்த ஏவுகணை சோதனை, நம் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் ஒரு முக்கிய மைல்கல்' என ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார்.