சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல்; பலி 11 ஆக உயர்வு; உயிர் பிழைத்தவர்கள் பகீர் தகவல்
சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல்; பலி 11 ஆக உயர்வு; உயிர் பிழைத்தவர்கள் பகீர் தகவல்
ADDED : நவ 05, 2025 11:23 AM

ராய்ப்பூர்: எனக்கு முன்னால் உடல்களை பார்த்தேன் என சத்தீஸ்கர் ரயில் விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் நடந்த சம்பவத்தை விவரித்து இருக்கின்றனர். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் உள்ள கெவ்ராவில் இருந்து பிலாஸ்பூர் நோக்கி நேற்று மாலை பயணியர் ரயில் சென்றது. அந்த ரயில் கடோரா, பிலாஸ்பூர் இடையே சென்றபோது, அதே தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதைக் கண்டு ரயில் இன்ஜின் டிரைவர் பதற்றமடைந்து பிரேக் பிடிப்பதற்குள், பயணியர் ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ரயிலில் இருந்த பயணியர் அலறியடித்து இறங்கினர்.
இந்த விபத்தில் பயணியர் ரயிலின் ஒரு பெட்டி சரக்கு ரயில் மீது ஏறி அந்தரத்தில் தொங்கியது. தகவல் அறிந்து வந்த மீட்புப்படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு பிலாஸ்பூரில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. மேலும் 14 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
நடந்தது என்ன?
மோதலுக்கு முன்னும் பின்னும் நடந்த திகில் சம்பவங்களை உயிர் பிழைத்தவர் விவரித்தனர். அதன் விபரம் பின்வருமாறு:
ரயிலில் பயணித்த சஞ்சீவ் விஸ்வகர்மா கூறியதாவது: மோதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு, தொலைபேசியைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். சில பயணிகள் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். சில நொடிகளில், ஜன்னல்கள் உடைந்தன. ரயிலின் பெட்டிகள் முழுவதும் பீதி பரவியது. ரயில் பலமாக குலுங்கிக் குலுங்கி ஏதோ ஒன்றில் மோதியது. இடி போன்ற சத்தத்தைத் தொடர்ந்து மக்களின் அலறல்கள் கேட்டது, என்றார்.
இருக்கைக்கு அடியில்…!
அகல்தாராவில் உள்ள தனது மாமியார் வீட்டிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த விஸ்வகர்மா என்பவர் கூறியதாவது: முதல் பெட்டியில் அமர்ந்திருந்தேன். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணிகள் 17 பேர் இருந்தனர்.
ரயில் மோதியதைத் தொடர்ந்து கண்களைத் திறந்தபோது, நான் இருக்கைக்கு அடியில் சிக்கிக் கொண்டேன். தனது ரயில் பெட்டி சரக்கு ரயிலின் மேல் ஏறிது. மக்கள் உதவிக்காக அழுது கொண்டிருந்தார்கள். என் கண் முன்னே உடல்களைக் கண்டேன். ஒரு பெண் உட்பட மூன்று பேர் இறந்தனர். அவர்களின் முகங்கள் இன்னும் என் மனதை விட்டு போகவில்லை, என்றார்.
வலது கால் சிக்கியது!
ராய்ப்பூரைச் சேர்ந்த மார்க்கெட்டிங் நிபுணரான மோகன் சர்மா கூறியதாவது: ரயிலில் பயணம் செய்தால் நேரத்தை மிச்சப்படுத்தலாம் என்று நினைத்தேன். ரயில் விபத்தில் நான் தரையில் வீசப்பட்டேன். என் தொலைபேசி பறந்து சென்றது.
ஜன்னலுக்கு வெளியே பார்த்தபோது, சரக்கு ரயில் பெட்டியின் மேல் முதல் பெட்டி இருப்பதைக் கண்டேன். என் வலது கால் சிக்கிக் கொண்டது, என்னால் அதை நகர்த்த முடியவில்லை.
ரயில்வே ஊழியர்கள் என்னை வெளியே இழுத்து சிகிச்சைக்காக விரைந்தனர். எல்லாம் சில நொடிகளில் நடந்தது. ரயில் கொஞ்சம் வேகத்தைக் குறைத்திருந்தால், உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும், என்றார்,
மறக்க முடியாது!
முதல் கோச்சில் பயணித்த இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி கணித மாணவி மெஹ்பிஷ் பர்வீன் கூறுகையில், 'ஒரு குடும்ப திருமணத்தில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்தேன். ரயில் விபத்தில் என் கால் உடைந்தது. எல்லோரும் உதவிக்காக கத்தியதால் ஏற்பட்ட அலறல்களை என்னால் மறக்க முடியாது, என்றார்.

