பூத் அளவில் 'வாட்ஸாப்' குழுக்கள் வலைதளங்களில் பா.ஜ., சுறுசுறு
பூத் அளவில் 'வாட்ஸாப்' குழுக்கள் வலைதளங்களில் பா.ஜ., சுறுசுறு
ADDED : பிப் 14, 2024 05:33 AM
பெங்களூரு, : லோக்சபா தேர்தலுக்காக, பூத் அளவில் 56,000, 'வாட்ஸாப்' குழுக்களில் பா.ஜ., சுறுசுறுப்பாக செயல்படுகிறது.
மத்திய பா.ஜ., அரசின் பதவி காலம், மே மூன்றாவது வாரம் நிறைவு பெறுகிறது. இதற்கு முன்னரே புதிய ஆட்சிக்கு, லோக்சபா தேர்தல் நடக்கும். நாடு முழுதும் பல கட்டங்களாக தேர்தல் நடத்த, இந்திய தேர்தல் ஆணையம் ஆயத்தம் ஆகிறது.
இந்த வகையில், மத்திய அரசின் திட்டங்களையும், கர்நாடகாவில் முந்தைய பா.ஜ., அரசின் திட்டங்களையும், மக்களிடம் கொண்டு செல்ல பா.ஜ., திட்டமிட்டுள்ளது.
இதற்காக, சமூக வலைதளங்களை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வியூகம் வகுத்துள்ளது. கடந்த கர்நாடக சட்டசபை தேர்தலின் போது, பூத் அளவில் வாட்ஸாப் குழுக்களை அமைத்து, தகவல் பரிமாறப்பட்டது.
இந்த வாட்ஸாப் குழுக்கள், இன்னமும் செயல்பாட்டில் உள்ளன. மாநிலத்தில் மொத்தம், 56,696 பூத்கள் உள்ளன. அதே எண்ணிக்கையில், பா.ஜ.,வின் பூத் மட்ட வாட்ஸாப் குழுக்கள் செயல்படுகின்றன.
ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சமாக 50 பேர் உள்ளனர். இந்த வாட்ஸாப் குழுக்களில், தினமும் பா.ஜ., அரசின் திட்டங்கள் பகிரப்படும்.
மத்திய அரசின் முக்கிய முடிவுகள், பிரதமர் நரேந்திர மோடியின் முக்கியமான தகவல், கட்சியின் முடிவுகள், எதிர்க்கட்சிகளின் தோல்விகளை பகிர்ந்து, ஓட்டாக மாற்றுவது இதன் நோக்கமாகும். மேலும், குறிப்பிட்ட தகவலை பார்ப்பவர்கள், மற்றவர்களுக்கும் அனுப்புவர்.
இதன் மூலம், மற்ற கட்சிகளை சேர்ந்தவர்களும், மனது மாறி பா.ஜ.,வுக்கு ஓட்டு போடுவர் என்பது கணிப்பு.
இதற்காக மாநில பா.ஜ., சார்பில் தனி சமூக வலைதள பிரிவும் செயல்படுகிறது. தேர்தல் நெருங்க, நெருங்க அந்த பிரிவு வேகமாக செயல்படுகிறது.

