அனுமன் கோவிலில் முதல்வர் வழிபாடு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்தார்
அனுமன் கோவிலில் முதல்வர் வழிபாடு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்தார்
ADDED : செப் 24, 2024 07:16 PM
புதுடில்லி:கன்னாட் பிளேஸ் அனுமன் கோவிலில், முதல்வர் ஆதிஷி சிங் நேற்று வழிபாடு செய்தார்.
டில்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அவருக்கு ஜாமின் வழங்கியது. ஆனால், முதல்வர் அலுவலகம் செல்லவும், கோப்புகளில் கையெழுத்திடவும் ஜாமின் உத்தரவில் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து நடந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் ஆதிஷி சிங், முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆதிஷி மற்றும் 5 அமைச்சர்களுக்கு கவர்னர் சக்சேனா பதவிப் பிரமானம் செய்து வைத்தார்.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் பொறுப்பை நேற்று முன் தினம் ஏற்றுக் கொண்ட ஆதிஷி சிங் நேற்று காலை, கன்னாட் பிளேஸ் அனுமன் கோவிலுக்கு வந்தார். அனுமன், சிவன் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு வழிபாடு செய்தார்.
அதன் பின் ஆதிஷி சிங் கூறியதாவது:
ஆம் ஆத்மி கட்சியையும், டில்லி அரசையும் இரண்டு ஆண்டுகளாக எதிரிகளின் தாக்குதலில் இருந்து அனுமந்தான் பாதுகாத்து வருகிறார். எங்கள் கட்சியை உடைத்து, டில்லி அரசின் மக்கள் நலப் பணிகளை முடக்க முயற்சிக்கின்றனர். டில்லி மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றவும், சட்டசபைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலை மீண்டும் முதலமைச்சராக கொண்டு வரவும், அனுமானடம் வேண்டினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹனுமன் சாலிசா பாடிய ஆதிஷி, கோவிலில் உள்ள சிவலிங்கத்துக்கு புனிதநீர் அபிஷேகம் செய்து வழிபட்டார். கோவிலின் தலைமை அர்ச்சகர், ஆதிஷிக்கு பிரசாதம் வழங்கினார்.