100 இடங்களில் 'அடல் கேன்டீன்' டிச., 25ல் திறப்பு முதல்வர் தகவல்
100 இடங்களில் 'அடல் கேன்டீன்' டிச., 25ல் திறப்பு முதல்வர் தகவல்
ADDED : நவ 22, 2025 12:32 AM
புதுடில்லி: “யாரும் பசியுடன் துாங்கக் கூடாது,” என, முதல்வர் ரேகா குப்தா பேசினார்.
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு, டில்லி மாநகர் முழுதும் 100 இடங்களில், ஐந்து ரூபாய்க்கு உணவு வழங்கும் 'அடல் கேன்டீன்' துவக்கப்படும் என, பட்ஜெட்டில் முதல்வர் ரேகா குப்தா அறிவித்து இருந்தார்.
அதன்படி, முதல் அடல் கேன்டீனுக்கு திமார்பூர் சஞ்சய் பஸ்தி குடிசைப் பகுதியில் முதல்வர் ரேகா குப்தா அடிக்கல் நாட்டி பேசியதாவது:
யாரும் பசியுடன் துாங்கக் கூடாது என்பதே டில்லி பா.ஜ., அரசின் நோக்கம். டிசம்பர் 25ம் தேதி மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த நாளில், டில்லியில் 100 இடங்களில் அடல் கேன்டீன் திறக்கப்படும்.
இந்த கேன்டீனில் ஏழைகளுக்கு, 5 ரூபாய்க்கு சத்தான உணவு வழங்கப்படும். தினமும் இரண்டு வேளை இங்கு உணவு கிடைக்கும்.
பிப்ரவரியில் நடந்த சட்டசபைத் தேர்தலில் அடல் கேன்டீன் துவக்கப்படும் என்ற வாக்குறுதி அளித்து இருந்தோம். எட்டே மாதங்களில் வாக்குறுதியை நிறைவேற்றத் துவங்கியுள்ளோம். இது, ஏழைத் தொழிலாளர்களுக்கு பா.ஜ., அரசு செலுத்தும் மரியாதைக்கு உதாரணம். நூறு கேன்டீன்கள் துவக்க, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முந்தைய ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் அரசுகள் குடிசைவாசிகளின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்யத் தவறி விட்டன. ஆனால், பா.ஜ., அரசு குடிசைப் பகுதிகளின் மேம்பாட்டுக்கு, 700 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
குடிசைப் பகுதிகளில் சாலை, வடிகால், கழிப்பறை, பூங்கா, சமூக சுகாதார மையங்கள் ஆகிய வசதிகள் செய்யப்படுகின்றன. அனைத்து தொகுதிகளிலும் குடிசைப் பகுதிகள் மேம்படுத்தப்படுகின்றன.
நம் நாடு உணவுப் பாதுகாப்பில் இருந்து, ஊட்டச்சத்து பாதுகாப்புக்கு முன்னேற வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைப்படி சுத்தமான, ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான உணவு அடல் கேன்டீன்களில் வழங்கப்படும்.
சுத்தமான பரிமாறும் பகுதி, பாதுகாப்பான குடிநீர், துருப்பிடிக்காத மேஜை மற்றும் நாற்காலிகள், டிஜிட்டல் டோக்கன் முறை, கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பான கழிவு மேலாண்மை மற்றும் முழுமையான சுகாதாரமான சூழல் ஆகியவை அடல் கேன்டீனில் பராமரிக்கப்படும்.
மதிய உணவு மற்றும் இரவு உணவின் போது தினமும் புதிய மற்றும் சத்தான உணவுகள் வழங்கப்படும். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் உணவுத் தரம் பரிசோதிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
டில்லி அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆஷிஷ் சூட், வடகிழக்கு டில்லி பா.ஜ., - எம்.பி., மனோஜ் திவாரி மற்றும் எம்.எல்.ஏ., சூர்ய பிரகாஷ் காத்ரி உட்பட பலர் பங்கேற்றனர்.

