டில்லியின் புது முதல்வர் அதிஷி: கெஜ்ரிவால் முடிவுக்கு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு!
டில்லியின் புது முதல்வர் அதிஷி: கெஜ்ரிவால் முடிவுக்கு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு!
UPDATED : செப் 17, 2024 01:39 PM
ADDED : செப் 17, 2024 11:57 AM

புதுடில்லி: டில்லி முதல்வர் பதவியை, ராஜினாமா செய்யப்போகும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பதிலாக, புதிய முதல்வராக அமைச்சர் அதிஷி மர்லேனா சிங் இன்று (செப்.,17) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மதுபான ஊழல் வழக்கில் சிறையில் இருந்த, டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது. விடுதலை ஆனாலும், அவர் அலுவலகம் செல்லக்கூடாது; பைல் பார்க்க முடியாது, கையெழுத்து போட முடியாது என்ற நிபந்தனைகள் உள்ளன. இதனால், முதல்வராக இருந்தும் பயனற்ற நிலை இருப்பதாக கருதி, பதவியை ராஜினாமா செய்ய கெஜ்ரிவால் தீர்மானித்தார்.
அவருக்கு பதிலாக புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடந்தது. இதில் அதிஷியின் பெயரை கெஜ்ரிவால் முன் மொழிய, அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் ஏற்றுக்கொண்டனர்.
கெஜ்ரிவால் எனது குரு!
புதிய முதல்வர் அதிஷி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இன்று அனைத்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மற்றும் டில்லியின் 2 கோடி மக்கள் சார்பாக டில்லியில் ஒரே ஒரு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என்று கூற விரும்புகிறேன். கெஜ்ரிவால் எனது குரு. அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் என்னிடம் இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்துள்ளார். என் மீது அவருக்கு நம்பிக்கை அதிகம் உள்ளது.
இந்த முடிவு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியில் மட்டும்தான் எடுக்க முடியும். நான் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தேன். தற்போது ஒரு மாநிலத்தின் முதல்வர் ஆகி உள்ளேன். கெஜ்ரிவால் என்னை நம்பி, அமைச்சர் பொறுப்பு கொடுத்தார். அவர் என் மீது வைத்த நம்பிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
யார் இந்த அதிஷி?
* ஆம்ஆத்மி கட்சியில் முக்கியமான எல்.ஏக்களில் ஒருவர் தான் அதிஷி மர்லேனா சிங் (வயது 43). பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர். அவரது பெற்றோர் இவருக்கு கம்யூனிச தலைவர்களான காரல் மார்க்ஸ், லெனின் ஆகியோரது பெயர்களை இணைத்து அதிஷி மர்லேனா என்று பெயர் சூட்டியுள்ளனர். எனினும் அவர் தற்போது அதிஷி என்ற பெயரை மட்டுமே பயன்படுத்தி வருகிறார்.
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில் உயர் படிப்பு படித்த அதிஷி, தொண்டு நிறுவனங்களில் பணியாற்றியவர். ம.பி., மாநிலத்தில் இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டிருந்தபோது ஆம் ஆத்மி கட்சியினருடன் ஏற்பட்ட அறிமுகத்தால் அந்த கட்சியில் இணைந்துள்ளார்.
ஆம்ஆத்மி கட்சியின் முக்கியமான தலைவர்கள் பட்டியலில் முன்னாள் துணை தலைவர் மணிஷ் சிசோடியாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.
* இவர் தான் டில்லி அரசின் பல்வேறு துறைகளை கவனித்து வருகிறார். இவர் கட்டுப்பாட்டில் தான் முக்கியமான கல்வி மற்றும் சுற்றுலா துறைகள் உள்ளன.
* இவர் கெஜ்ரிவால் சிறையில் இருந்து போது, பா.ஜ., அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். கடைசி வரை போராட்டத்தை கைவிட மாட்டேன் என உறுதியாக இருந்தார்.
* அவர் உடல்நிலை ஒத்துழைக்காமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு தான், போராட்டத்தை கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
* சட்டசபை தேர்தல் வரை டில்லி முதல்வராக அதிஷி இருப்பார் என ஆம்ஆத்மி கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.