ஏ.டி.எம்., கொள்ளை கும்பலை சேர்ந்தவன் அதிரடியாக கைது
ஏ.டி.எம்., கொள்ளை கும்பலை சேர்ந்தவன் அதிரடியாக கைது
UPDATED : நவ 27, 2026 05:16 PM
ADDED : நவ 27, 2026 05:16 PM
புதுடில்லி: டில்லி மட்டுமின்றி மேலும் சில மாநிலங்களில் ஐந்து ஏ.டி.எம்., கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர், ஹரியானா மாநிலம் நுஹ்மோவாட் பகுதியில் கைது செய்யப்பட்டார்.
டில்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் அசாமில், பணம் எடுக்கும் ஏ.டி.எம்., இயந்திரத்தில் கொள்ளை நடத்திய கும்பலை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கும்பலை சேர்ந்த ராகுல் கான், 30 என்பவர், ஹரியானாவின், நுஹ்மோவாட் பகுதியில், போலீசாரால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார்.
டில்லியில் பதிவான இரண்டு வழக்குகளில், தேடப்படும் குற்றவாளியாக ராகுல் கான் அறிவிக்கப்பட்டிருந்தார். இத்துடன், பணம் எடுக்கும் ஏ.டி.எம்., இயந்திரத்தில் 1.91 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கிலும் அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். மேகாலாயா மற்றும் அசாம் மாநிலங்களில் நடந்த ஏ.டி.எம்., கொள்ளையிலும் இவருக்கு தொடர்பு இருப்பது, விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
ஏற்கனவே, கடந்த மார்ச் மாதம் ராகுல் கானை, டில்லி தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது ஒரு கும்பல், போலீசார் மீது தாக்குதல் நடத்தி ராகுல் கானை காப்பாற்றியது. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில், ராகுல் கான் கும்பலை சேர்ந்த ஒருவருக்கு குண்டு காயம் ஏற்பட்டது. எனவே, ராகுல் கான் கும்பலில் எத்தனை பேர் இருக்கின்றனர் என்பது குறித்தும், அவர்களின் பின்னணி குறித்தும் விசாரணை நடக்கிறது.
