இளம்பெண்ணிடம் ரூ.1.7 லட்சம் மோசடி ஆடையை கழற்றச்சொல்லி அட்டூழியம்
இளம்பெண்ணிடம் ரூ.1.7 லட்சம் மோசடி ஆடையை கழற்றச்சொல்லி அட்டூழியம்
ADDED : டிச 02, 2024 05:31 AM

மும்பை: மஹாராஷ்டிராவில், 'டிஜிட்டல் கைது' எனக் கூறி, இளம்பெண்ணிடம் 1.7 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபர்கள், சோதனை என்ற பெயரில், அந்த பெண்ணின் ஆடைகளை கழற்றச் சொல்லி அட்டூழியத்தில் ஈடுபட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இணைய வழி மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள், சமீப காலமாக, 'டிஜிட்டல் கைது' எனப்படும் சைபர் குற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு அதிகாரிகள், மத்திய விசாரணை அதிகாரிகள் போல் தங்களை காட்டிக் கொள்ளும் மர்ம நபர்கள், ஆடியோ, வீடியோ அழைப்புகள் வாயிலாக, மக்களை தொடர்பு கொண்டு மிரட்டி, பணம் பறிக்கின்றனர். இந்த கும்பலுக்கு பயந்து, மக்களும் பணத்தை இழந்து வருகின்றனர்.
மத்திய விசாரணை அமைப்புகளின் அதிகாரிகள் இது போன்ற செயலில் ஈடுபட மாட்டார்கள் என, அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், மோசடி கும்பலிடம் தொடர்கதையாக உள்ளது.
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவருக்கு, கடந்த 19ல் மொபைல் போனில் புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர், தான் டில்லி போலீஸ் அதிகாரி என்றும், தற்போது சிறையில் இருக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில், உங்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், விரைவில் கைது செய்யப் போவதாகவும் அந்த பெண்ணை மிரட்டினார்.
பயந்து போன அந்த பெண், தனக்கு இதில் தொடர்பு இல்லை எனக் கூறினார். இதன்பின், வீடியோ காலில் அந்த பெண்ணை தொடர்பு கொண்ட மோசடி நபர்கள், டிஜிட்டல் கைது செய்துள்ளதாகவும், யாரிடமும் தெரிவிக்காமல் ஹோட்டலுக்கு சென்று அறை எடுத்து தங்கும்படியும் கூறினர்.
இதை நம்பி, ஹோட்டலுக்கு சென்று அறை எடுத்து அந்த பெண் தங்கினார். மீண்டும் வீடியோ காலில் அழைத்த மோசடி நபர்கள், அந்த பெண்ணை மிரட்டி, 1,78,000 ரூபாய் பறித்தனர்.
மேலும், முழு உடல் சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி, ஆடைகளை கழற்றும்படி, அந்த பெண்ணை மோசடி நபர்கள் மிரட்டினர். பயந்து போன அந்த பெண் ஆடைகளை கழற்றினார். சிறிது நேரத்துக்கு பின், வீடியோ கால் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சில நாட்களுக்கு பின், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த பெண், இது குறித்து மும்பை போலீசில் புகார் அளித்தார். இதன்படி வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.