காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தாக்குதல்: பயங்கரவாதிகள் அட்டூழியம்
காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தாக்குதல்: பயங்கரவாதிகள் அட்டூழியம்
ADDED : ஜூலை 08, 2024 04:47 PM

ஸ்ரீநகர்: காஷ்மீரில் இந்திய ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
ஜம்மு - காஷ்மீரில் கடந்த இரு மாதங்களாகவே நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு , லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் பிரிவான, 'தி ரெசிஸ்டென்ஸ் பிரன்ட்' என்ற அமைப்பே முக்கிய காரணம் என, என்.ஐ.ஏ., தெரிவித்து உள்ளது. பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்க, பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கதுவா மாவட்டத்தில் உள்ள மச்சேடி பகுதியில், இன்று (ஜூலை 08) இந்திய ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடந்த கால தாக்குதல் விபரம்:
* ஜூன் 11ம் தேதி சத்திரகல்லாவில் உள்ள சோதனைச் சாவடியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், ஆறு பாதுகாப்புப் படை அதிகாரிகள் காயமடைந்தனர்.
* ஜூன் 26ம் தேதி தோடா மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
* ஜூலை 6ம் தேதி குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. ஆறு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இரண்டு வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.