மே.வங்கத்தில் டாக்டர்கள் மீது தாக்குதல்: நோயாளியின் உறவினர்கள் வன்முறை
மே.வங்கத்தில் டாக்டர்கள் மீது தாக்குதல்: நோயாளியின் உறவினர்கள் வன்முறை
ADDED : ஜன 24, 2025 11:34 PM
பர்தாமான்: மேற்கு வங்கத்தில் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என குற்றஞ்சாட்டி, மருத்துவமனையில் தகராறில் ஈடுபட்ட நோயாளியின் உறவினர்கள், டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
மேற்கு வங்கத்தின் புர்பா பர்தாமான் மாவட்டத்தில் உள்ள பர்தாமான் நகரில் தனியாருக்கு சொந்தமான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஒன்று உள்ளது.
இங்கு சக்திகார் பகுதியில் உள்ள ஸ்வேதிபள்ளி யைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற்றார்.
நேற்று முன்தினம் இரவு, நோயாளியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், முறையான சிகிச்சை அளிக்கவில்லை என கூறி, மருத்துவமனை நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், இருதரப்பையும் சமாதானப்படுத்த முயன்றனர். அதை ஏற்க மறுத்த நோயாளியின் உறவினர்கள், டாக்டர்கள் மற்றும் போலீசாரை சரமாரியாக தாக்கினர்.
மேலும் மருத்துவமனை ஊழியர்களையும் தாக்கிய அவர்கள், அங்கிருந்த பொருட்களையும் சூறையாடினர். இந்த தாக்குதலில் ஐந்து போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த சக்திகார் போலீசார், நிைலமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையே, தாக்குதலில் தொடர்புடைய ஆறு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.