மது அருந்தக் கூடாது என்ற அரசு அதிகாரி மீது தாக்குதல்
மது அருந்தக் கூடாது என்ற அரசு அதிகாரி மீது தாக்குதல்
ADDED : செப் 21, 2024 11:18 PM

தார்வாட்: அரசு அலுவலகம் முன் மது அருந்தக் கூடாது என்று அறிவுரை கூறிய அதிகாரியை, போதையில் இருந்த சகோதரர்கள் தாக்கிவிட்டுத் தப்பியோடினர்.
தார்வாட் மாவட்டம், ஹூப்பள்ளியின் அதர்குஞ்சி கிராமத்தில், பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. நேற்று முன்தினம், நிர்வாக அதிகாரி நீலப்பா, பணி முடித்து வீட்டுக்கு புறப்பட்டார்.
அப்போது அலுவலகம் முன், தன் சகோதரருடன் சேர்ந்து முகமது சாப் நாடப் மது அருந்திக் கொண்டிருந்தார். இதை பார்த்த அதிகாரி, “அரசு அலுவலகம் முன் மது அருந்துவதோ, ஆட்சேபனைக்குரிய செயலில் ஈடுபடுவதோ சட்டப்படி தவறு,” என அறிவுரை கூறினார்.
கோபமடைந்த இருவரும், நீலப்பாவை திட்டியதுடன், சரமாரியாக தாக்கினர். இதில், நீலப்பாவின் தலை, கண்ணின் கீழ் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதைத் தடுக்க கிராமத்தினர் வந்தபோது, சகோதரர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
படுகாயமடைந்த நீலப்பாவை, கிம்ஸ் மருத்துவமனையில் கிராமத்தினர் சேர்த்தனர். தகவல் அறிந்த தாசில்தார் பிரகாஷ் நாஷி, அவரிடம் நலம் விசாரித்த பின், போலீசில் புகார் செய்தார்.
ஹூப்பள்ளி கிராம போலீஸ் நிலைய போலீசார், சகோதரர்களை தேடி வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கிராம பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி நீலப்பாவிடம், தாசில்தார் பிரகாஷ் நாஷி நலன் விசாரித்தார்.