பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் மணிப்பூரில் மீண்டும் பதற்றம்
பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் மணிப்பூரில் மீண்டும் பதற்றம்
ADDED : ஜன 04, 2025 11:42 PM

இம்பால்: மணிப்பூரில், பாதுகாப்புப் படையினரை வெளியேற்ற வலியுறுத்தி, பழங்குடியினர் நடத்திய திடீர் தாக்குதலில், போலீஸ் எஸ்.பி., படுகாயம் அடைந்தார். நிலைமையை கட்டுக்குள் வைக்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, மெய்டி மற்றும் கூகி சமூகத்தினருக்கு இடையே, 2023 மே மாதம் மிகப்பெரிய மோதல் ஏற்பட்டு, கலவரமாக மாறியது.
போராட்டம்
இதில், 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், கிழக்கு இம்பால் மாவட்டத்தில் முகாமிட்டுள்ள பாதுகாப்பு படையினரை திரும்பப் பெற வலியுறுத்தி சைபோல் கிராமத்தில், கூகி பழங்குடியினர் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 31ல், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்போக்பி மாவட்டத்தில் உள்ள எஸ்.பி., அலுவலகத்தை கிராம மக்கள் நேற்று முன்தினம் இரவு முற்றுகையிட்டனர்.
நள்ளிரவில், திடீரென வன்முறையில் இறங்கினர். துணை கமிஷனர் அலுவலகம் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தியவர்கள், பெட்ரோல் குண்டுகளை வீசியதால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
இந்த தாக்குதலில், அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர்.
போலீசார் குவிப்பு
இதில், போலீஸ் எஸ்.பி., பிரபாகர் மற்றும் போலீசார் காயம் அடைந்தனர். பல மணி நேர போராட்டத்துக்கு பின், வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், காங்போக்பி மாவட்டம் முழுதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, மாவட்டம் இடையே செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

