ஓ.பி.சி., பிரிவினரை பிளவுபடுத்த முயற்சி: ஜார்க்கண்ட் பிரசாரத்தில் மோடி எச்சரிக்கை
ஓ.பி.சி., பிரிவினரை பிளவுபடுத்த முயற்சி: ஜார்க்கண்ட் பிரசாரத்தில் மோடி எச்சரிக்கை
ADDED : நவ 11, 2024 06:46 AM

பொகாரோ : ''ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்த பிரிவினர் இடையே பிளவுகளை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. ஒன்றாக இருந்தால்தான் பாதுகாப்பு,'' என, பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்டில் நடந்த பிரசாரத்தில் குறிப்பிட்டார்.
ஜார்க்கண்டில், முதல்வர் ேஹமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு சட்டசபைக்கு, 13 மற்றும் 20ம் தேதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. பொகாரோவில் நேற்று நடந்த பா.ஜ., பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:
காங்கிரஸ் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சதியில் இருந்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வர்.
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவினர் ஒற்றுமையாக இருப்பதற்கு காங்கிரஸ் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த பிரிவினர் இடையே ஒற்றுமை இல்லாததால்தான், மத்தியில் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியை பிடித்து வந்தது; மக்களை கொள்ளையடித்தது.
சோட்டாநாக்பூர் பிராந்தியத்தில் மட்டும், ஓ.பி.சி.,யில், 125 துணைப் பிரிவுகள் உள்ளன. இதில் ஒவ்வொரு துணைப் பிரிவினர் இடையேயும் பிரிவினை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. நீங்கள் ஒன்றாக இருந்தால்தான் அது உங்களுக்கு பாதுகாப்பு.
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அங்கு, அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை அமல்படுத்தினோம். ஆனால், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கொண்டு வந்து, அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்க துடிக்கின்றன. மீண்டும் பயங்கரவாதத்தை புகுத்த நினைக்கின்றன.
கடந்த, 2004 - 2014ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தாலும், காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா தான் அரசை நடத்தி வந்தார். அந்த, 10 ஆண்டுகளில் மிகுந்த போராட்டங்களுக்குப் பின், 80 ஆயிரம் கோடி ரூபாயை மட்டுமே மாநிலத்துக்கு ஒதுக்கினர். ஆனால், பா.ஜ.,வின், 10 ஆண்டு கால ஆட்சியில், 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.