ADDED : மார் 21, 2025 05:20 AM

பெங்களூரு : கன்னட நடிகை ஷரண்யா ஷெட்டியின் போட்டோ மற்றும் பெயரை பயன்படுத்தி, விஷமிகள் பணம் கேட்கின்றனர். இதை நம்ப வேண்டாம் என, அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கன்னடத்தில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஷரண்யா ஷெட்டி. அவரது பெயர் மற்றும் போட்டோவை பயன்படுத்தி, விஷமிகள் பணம் சம்பாதிக்க முயற்சிக்கின்றனர்.
அவரது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு துவக்கினர். அதில் அவரது போட்டோக்களை 'அப்லோட்' செய்துள்ளனர். அதில் 'நான் மிகவும் பணக்கஷ்டத்தில் இருக்கிறேன். உங்களிடம் இருந்தால், தயவு செய்து எனக்கு அனுப்புங்கள்' என பலருக்கும் பொய்யாக மெசேஜ் அனுப்பி உள்ளனர்.
இது குறித்து, ஷரண்யா ஷெட்டி கூறுகையில், ''எனக்கு அறிமுகம் இல்லாத சிலர், என் பெயர் மற்றும் போட்டோவை பயன்படுத்தி பணம் பறிக்க முயற்சிக்கின்றனர். யாரும் இதை நம்பி பணம் அனுப்பி ஏமாறாதீர்கள். இது குறித்து, சைபர் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிப்பேன்,'' என்றார்.