கோவிலுக்குள் நுழைய எதிர்ப்பு விக்ரஹத்தை அகற்ற முயற்சி
கோவிலுக்குள் நுழைய எதிர்ப்பு விக்ரஹத்தை அகற்ற முயற்சி
ADDED : நவ 11, 2024 05:26 AM

மாண்டியா: மாண்டியாவில் காலபைரவேஸ்வரா கோவிலுக்குள், குறிப்பிட்ட சமூகத்தினர் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததால், மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சாமி விக்ஹத்தை எடுத்து செல்ல முற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
மாண்டியா மாவட்டம், ஹனகெரே கிராமத்தில் பழமையான காலபைரவேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்குள் அனைத்து சமூகத்தினரும் சென்று வந்தனர். நாளடைவில், இக்கோவில் ஹிந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
எதிர்ப்பு
நான்கு மாதங்களுக்கு முன், இக்கோவிலுக்குள் நுழைய குறிப்பிட்ட சமூகத்தினரை அனுமதிக்க முடியாது என்று மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாவட்ட நிர்வாகத்திடம், அனுமதி மறுக்கப்பட்ட சமூகத்தினர் புகார் செய்தனர். இதையடுத்து, இரு சமூகத்தினரையும் அழைத்து, சமாதான கூட்டம் நடத்தியும், பிரச்னை முடிவுக்கு வரவில்லை.
இதையடுத்து நேற்று காலை கோவிலுக்குள், அனுமதி மறுக்கப்பட்ட சமூகத்தினர் சுவாமி தரிசனம் செய்யலாம் என மாவட்ட நிர்வாகத்தினர், ஹிந்து அறநிலைய துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களும் உள்ளே சென்று தரிசனம் செய்தனர்.
இதனால் கோபம் அடைந்த மற்றொரு சமூகத்தினர், 'இனி நாங்கள் யாரும் கோவிலுக்குள் நுழைய மாட்டோம். கோவிலை நீங்கள் வைத்து கொள்ளுங்கள், சுவாமியை நாங்கள் வைத்து கொள்கிறோம்' என கூறி, கோவிலுக்குள் நுழைந்து, அங்குள்ள காலபைரவேஸ்வரர் உற்சவ விக்ரஹத்தை வெளியே எடுத்து வந்தனர்.
மேலும் சிலர், கோவில் பெயர் பலகையை அகற்ற முற்பட்டனர். இதனால், பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, ஒரு அறையில் உற்சவர் விக்ரஹம் வைத்து பூட்டப்பட்டது.
உரிமை உண்டு
தாசில்தார் சிவகுமார் கூறுகையில், ''ஆரம்பத்தில் அனைவரும் சுவாமி தரிசனம் செய்து வந்தனர். நான்கு மாதங்களுக்கு முன், ஒரு சமூகத்தினருக்கு மற்றொரு சமூகத்தினர் அனுமதி மறுத்துள்ளனர். கோவிலுக்குள் செல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
மாநில அம்பேத்கர் போராட்ட சங்க தலைவர் கங்கராஜு கூறியதாவது:
ஆரம்பத்தில் அனைவரும் ஒன்றாக தான், கோவிலுக்குள் சென்று வந்தோம். ஆனால் திடீரென சிலர், நாங்கள் கோவிலுக்குள் வர எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கும், ஹிந்து அறநிலைய துறைக்கும் தெரிவிக்கப்பட்டது.
சமாதான கூட்டம் நடத்தியும் தீர்வு எட்டவில்லை. ஆனாலும், மாவட்ட நிர்வாகம், சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்தது. அப்போது சிலர் கோவிலுக்கு வெளியே போராட்டம் நடத்தி, கோவில் பெயர் பலகையை சேதப்படுத்தினர்.
இவ்வாறு அவர் கூறினார்.
காலபைரவேஸ்வரர் சுவாமி கோவிலுக்குள் குறிப்பிட்ட சமூகத்தினர் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, மற்றொரு சமூகத்தினர், மாவட்ட நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோவிலுக்குள் இருந்து உற்சவரை வெளியே எடுத்து வர முயற்சித்த மற்றொரு சமூகத்தினர்.