ADDED : ஜன 17, 2024 01:57 AM
பெங்களூரு  : போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி பெயரில் போலி 'இ - மெயில்' மூலம் மர்ம நபர், 9.70 லட்சம் ரூபாய் கேட்டது தொடர்பாக, சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு, சாந்தி நகரில் உள்ள பி.எம்.டி.சி., தலைமை கணக்காளர் அப்துல் குத்துாசுக்கு, 'caofa@mybmtc.com' என்ற முகவரிக்கு 'ceo.care@lifeinsurancecares.in' என்ற முகவரியில் இருந்து ராமலிங்க ரெட்டி பெயரில், கடந்த 13ம் தேதி இ--மெயில் வந்தது.
அதில், 'உடனடியாக 9.70 லட்சம் ரூபாயை ஆர்.டி.ஜி.எஸ்., மூலம் அனுப்புங்கள்' என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக, உடனடியாக அமைச்சர் ராமலிங்க ரெட்டிக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.
அவரும், அதுபோன்று தான் எதுவும் இமெயில் அனுப்பவில்லை என்று தெளிவுபடுத்தினார். இது தொடர்பாக, பி.எம்.டி.சி., உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அவர்களின் அறிவுறுத்தலின்படி, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

