ஆற்றுகால் பகவதி அம்மன் பொங்கல் விழா * லட்சக்கணக்கான பெண்கள் வழிபாடு
ஆற்றுகால் பகவதி அம்மன் பொங்கல் விழா * லட்சக்கணக்கான பெண்கள் வழிபாடு
ADDED : மார் 14, 2025 01:59 AM
திருவனந்தபுரம்:திருவனந்தபுரம் அருகே ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் நடந்த மாசி பொங்கல் விழாவில் லட்சக்கணக்கான பெண்கள் ஒரே நேரத்தில் பொங்கலிட்டு வழிபட்டனர்.
திருவனந்தபுரம் அருகே அமைந்துள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் தமிழக வரலாற்றுடன் நெருங்கிய தொடர்புடையது. மதுரையை எரித்த கண்ணகி கேரள மாநிலம் கொடுங்கல்லூர் செல்லும் வழியில் திருவனந்தபுரம் கிள்ளி ஆற்றின் கரையில் தங்கியதாகவும், அங்கு முதியவர் ஒருவரின் கனவில் வந்து தனக்கு இங்கு கோயில் கட்ட வேண்டும் என்று கூறியதன் பேரில் இங்கு இந்த கோயில் கட்டப்பட்டதாகவும் வரலாறு. இதற்கு ஆதாரமாக திருவிழாவின்போது கண்ணகி தோட்டம் பாட்டு பாடப்படுகிறது. இங்கு நடக்கும் மாசி பொங்கல் விழா மிக பிரசித்தி பெற்றது.
இந்த ஆண்டுக்கான திருவிழா மார்ச் 5 காலை அம்மனுக்கு காப்பு கட்டி குடியிருத்தும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சியுடன் விழா நடந்து வந்தது. விழா ஒன்பதாவது நாளான நேற்று காலை 10:15 மணிக்கு கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த முக்கிய அடுப்பில் தந்திரி பரமேஸ்வரன்வாசுதேவன் பட்டதிரிபாடு, மேல் சாந்தி முரளிதரன் நம்பூதிரி ஆகியோர் தீ மூட்டி தொடங்கி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து ஒலி பெருக்கியில் செண்டை மேளம் முழக்கப்பட்டதும் கோயிலை சுற்றி 10 கி.மீ., சுற்றளவில் தயாராக இருந்த பெண்கள் தீ மூட்டி பொங்கலிட்டனர். திருவனந்தபுரம் நகரம் புகை மூட்டத்தில் மூழ்கியது. திருவனந்தபுரம் பஸ் ஸ்டாண்ட், தலைமைச்செயலகம், சட்டசபை போன்ற இடங்களிலும் மக்கள் பொங்கலிட்டனர்.
இவ்விழாவில் ஆண்களுக்கு அனுமதி இல்லை என்பதால் நேற்று திருவனந்தபுரம் நகர் முழுவதும் பெண்கள் கூட்டமாக இருந்தது. போக்குவரத்து மாற்றிவிடப்பட்டிருந்தது. 3000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. திருவனந்தபுரத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.