UPDATED : டிச 15, 2024 07:12 PM
ADDED : டிச 15, 2024 04:23 PM

பெங்களூரு: வரதட்சணை கேட்டதாக கொடுக்கப்பட்ட பொய் புகார்களால் ஏற்பட்ட மன உளைச்சலில் பெங்களூருவில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரது மனைவி, மாமியார் மற்றும் மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரில் பணியாற்றி வந்த மென்பொருள் பொறியாளர் அதுல் சுபாஷ், 34 சமீபத்தில் தற்கொலை செய்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து 24 பக்க கடிதமும், 90 நிமிட வீடியோவும் பதிவு செய்துள்ளார். அதில், தன் மனைவி நிகிதா சிங்கானி, அவரது பெற்றோர் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து துன்புறுத்தினர். 10 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டதாக பொய் புகார் கொடுத்தார் என வீடியோவில் கூறியிருந்தார். இந்த வீடியோவும் கடிதமும் சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது குறித்து அதுல் சுபாஷின் மனைவி நிகிதா சிங்கானி மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், அவர் தலைமறைவானார். அவர்களை தேடி பெங்களூரு போலீசார் உ.பி., சென்றிருந்தனர்.
இந்நிலையில் ஹரியானா மாநிலம் குருகிராமில் நிகிதா சிங்கானி அவரது தாயார் நிஷி சிங்கானியை போலீசார் கைது செய்தனர். நிகிதா சிங்கானியின் சகோதரர் அனுராக் சிங்கானியை உ.பி., மாநிம் அலகாபாத்தில்போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி, இவர்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.