மராட்டியர்களால் தோற்கடிக்கப்பட்டவர் அவுரங்கசீப்: அமைச்சர் அமித் ஷா பேச்சு
மராட்டியர்களால் தோற்கடிக்கப்பட்டவர் அவுரங்கசீப்: அமைச்சர் அமித் ஷா பேச்சு
ADDED : ஏப் 13, 2025 12:20 AM

மும்பை: ''தன்னைத்தானே 'ஆலம்கீர்' எனப்படும், 'பிரபஞ்சத்தை ஆளப்பிறந்தவன்' கூறிக் கொண்ட முகலாய மன்னர் அவுரங்கசீப், மராட்டியர்களால் தோற்கடிக்கப்பட்டு, மஹாராஷ்டிராவில் அடக்கம் செய்யப்பட்டார்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
போராட்டம்
இங்குள்ள சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தின் குல்தாபாத் நகரில் முகலாய மன்னர் அவுரங்கசீபின் கல்லறை உள்ளது.
அவுரங்கசீபின் மகன் ஆஸம் ஷா, நிஜாம் ஆஸப் ஜா உள்ளிட்டோரின் கல்லறைகளும் இங்குதான் உள்ளன.
அவுரங்கசீபின் கல்லறையை அகற்றும்படி மஹாராஷ்டிராவில் சமீப காலமாக போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், மஹாராஷ்டிராவின் ராய்கட்டில் உள்ள சத்ரபதி சிவாஜி கோட்டையில், சிவாஜியின் 345வது நினைவு தினம் நேற்று நடந்தது. அதில், மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், மற்றும் சிவாஜியின் வாரிசுகளான பா.ஜ., - -எம்.பி.,உதயன்ராஜே போஸ்லே, மஹாராஷ்டிர அமைச்சர் சிவேந்திரஷின் போஸ்லே ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், அமித் ஷா பேசியதாவது:
தன்னைத்தானே 'ஆலம்கீர்' என்று அழைத்துக்கொண்ட ஒரு ஆட்சியாளர், உயிரோடு இருந்தவரை மராட்டியர்களுடன் போராடி, இறுதியில் தோல்வியடைந்தவராக மஹாராஷ்டிராவில் இறந்தார். அவரது கல்லறை மராட்டிய மண்ணில் அமைந்துள்ளது.
மன உறுதி
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியை மஹாராஷ்டிராவுக்குள் சுருக்க வேண்டாம். சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைத்த அவரது மன உறுதி, தைரியத்தை நம் நாடு போற்றுகிறது.
இந்திய சுதந்திரத்தின் 100வது ஆண்டு நிறைவின்போது, வல்லரசாக வேண்டும் என்ற லட்சியத்துக்கு, சிவாஜியின் 'சமதர்மம், சுயராஜ்யம்' கொள்கைகள் ஊக்குவித்து வருகின்றன. சமதர்மத்தை பாதுகாத்து, சுயராஜ்யத்தை நிறுவி, தனது தாய் ஜிஜாபாய்க்கு பெருமை சேர்த்தவர், சத்ரபதி சிவாஜி.
இந்த ராய்கட் கோட்டைதான் அவரது தலைநகராக இருந்தது. சத்ரபதி சிவாஜியின், 'ராஜமுத்திரை' தான், தற்போது இந்திய கடற்படையின் கொடியாக இருக்கிறது.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.
ஆலம்கீர் என்றால், பாரசீக மொழியில், 'பிரபஞ்சத்தை ஆளப்பிறந்தவன்' என, பொருள்.

