பக்தர்களுக்கு இடையூறாக திருமணம் விசாரணைக்கு அதிகாரிகள் உத்தரவு
பக்தர்களுக்கு இடையூறாக திருமணம் விசாரணைக்கு அதிகாரிகள் உத்தரவு
ADDED : ஜன 14, 2025 02:43 AM

இந்துார்: மத்திய பிரதேசத்தின் இந்துார் மாவட்டத்தில் உள்ள ராஜ்பாடா என்ற பகுதியில், 200 ஆண்டுகள் பழமையான, 'கோபால் மந்திர்' என்ற கோவில் உள்ளது.
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்துாரின் பாரம்பரிய தலங்களில் ஒன்றாக இந்த கோவில் உள்ளது.
இந்த கோவிலில், சமீபத்தில் மிக பிரமாண்டமாக திருமணம் ஒன்று நடந்தது. இதையொட்டி கோவில் வளாகம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மேலும், மத சடங்குகளின்படி கோவிலில் திருமணம் நடந்ததாகவும், விருந்தினர்களுக்கு விருந்து வைக்கப்பட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டனர். இந்த திருமணத்தால் கோவிலில் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டதோடு, அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பாரம்பரியமிக்க இந்த கோவிலில் திருமணத்துக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என, பக்தர்கள் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கிடையே, திருமணத்திற்காக, ராஜ்குமார் அகர்வால் என்பவர், கோபால் மந்திர் கோவிலை நிர்வகிக்கும், 'சன்ஸ்தான் ஸ்ரீ கோபால் மந்திர்' அமைப்புக்கு, 25,551 ரூபாய் செலுத்திய ரசீது, சமூக வலைதளத்தில் வெளியானது. இது குறித்தும் விசாரணை நடப்பதாக அதிகாரிகள் கூறினர்.