ADDED : மார் 18, 2024 05:14 AM

பெங்களூரு :  பெங்களூரு தீபாஞ்சலி நகரில் கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் ஐந்தாவது டிப்போ அமைந்துள்ளது. இங்குள்ள பெண் நடத்துனர் மஞ்சம்மா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:
தீபாஞ்சலி கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் ஐந்தாவது டிப்போவில் நடத்துனராக உள்ளேன். இங்குள்ள மேலாளர் கிருஷ்ணப்பா, பணிக்கு சீக்கிரம் வந்தாலும், எங்களுக்கு பணி ஒதுக்குவதில் தாமதம் செய்கிறார்.
'சக்தி' திட்டம் அமலில் உள்ளதால், எவ்வளவு நேரமானாலும் பணியை முடித்துவிட்டு தான் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார். காலை முதல் மாலை வரை பணி ஒதுக்காமல், நாங்கள் விடுப்பில் இருப்பதாக எழுதி வைத்து சித்ரவதை செய்கிறார்.
இதை எதிர்த்து கேட்டால், வாய்க்கு வந்தபடி திட்டுகிறார். இப்பிரச்னையை, சி.டி.எம்., என்ற முதன்மை போக்குவரத்து மேலாளர் அந்தோணி ஜார்ஜிடம் கொண்டு சென்றோம்.
முதல்வர் சித்தராமையாவுக்கும், போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டிக்கும், இந்த டிப்போவில் பணியாற்றும் நான் உட்பட 44 ஊழியர்கள் கையெழுத்திட்ட கடிதம் அனுப்பி வைத்துள்ளோம்.
இவ்வாறு அதில் பேசி உள்ளார்.

