டில்லியில் துவங்கியது வாகன கண்காட்சி மின்சாரமயமாகும் வாகனத்துறை
டில்லியில் துவங்கியது வாகன கண்காட்சி மின்சாரமயமாகும் வாகனத்துறை
ADDED : ஜன 17, 2025 11:56 PM

புதுடில்லி:'பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ' வாகன கண்காட்சி, புதுடில்லியில் பாரத் மண்டபம் பகுதியில் துவங்கியது. கண்காட்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல், கனரக தொழில்கள் துறை அமைச்சர் குமாரசாமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். வரும், 22ம் தேதி வரை கண்காட்சி நடைபெறுகிறது.
மொத்தம், 2 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி, மூன்று பகுதிகளிலும், ஒன்பது பிரிவுகளாகவும், 14 அரங்குகளில் நடக்கிறது. இதில், 1,500க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
அதாவது, வாகன கண்காட்சி, சர்வதேச டயர் கண்காட்சி, சைக்கிள் கண்காட்சி, பாரத் பேட்டரி கண்காட்சி, ஸ்டீல் அரங்கம், போக்குவரத்து தொழில்நுட்ப அரங்கம் போன்றவை, பாரத் மண்டபம் பகுதியில் நடக்கின்றன. பேட்டரி கண்காட்சி மட்டும் நாளை துவங்குகிறது.
வாகன அறிமுகங்கள் முதல் இரண்டு நாட்களுக்கு மட்டுமே நடக்கிறது.
வாகன உதிரிபாகங்கள் கண்காட்சி, புதுடில்லியின் துவாரகா பகுதியிலும், பாரத் கட்டுமான இயந்திர கண்காட்சி, நகர்ப்புற கட்டுமான மற்றும் போக்குவரத்து கண்காட்சி போன்றவை, கிரேட்டர் நொய்டாவிலும் நடைபெறுகின்றன. இதில், வாகன உதிரிபாக கண்காட்சி இன்று துவங்குகிறது.
வாகன துறையின் எதிர்காலமாக மின்சார வாகனங்கள் கருதப்படுகின்றன. அதன் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியில் பங்கேற்கும் அனைத்து நிறுவனங்களும், மின்சார வாகனங்களை அறிமுகம் செய்கின்றன.
அத்துடன், காற்று மாசை குறைக்கும் வகையில் ஹைபிரிட் தொழில் நுட்பங்கள், எத்தனால் கலப்பு வாகனங்கள், சி.என்.ஜி., மற்றும் எல்.என்.ஜி., வாகனங்கள் போன்றவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நடப்பாண்டு வாகன கண்காட்சியில், 34க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்ககேற்கின்றன. இந்தியாவின் மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா நிறுவனங்கள், தென் கொரியாவின் ஹூண்டாய், கியா நிறுவனங்கள், ஜெர்மனியின் ஸ்கோடா, ஜப்பானின் டொயோட்டா, சீனாவின் பி.ஒய்.டி., மற்றும் எம்.ஜி., நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
முதல் முறையாக வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனமும், இதில் பங்கேற்றுள்ளது. அத்துடன், மின்சார கார்களை அறிமுகப்படுத்தி, இந்திய சந்தையில் நுழையவும் உள்ளது. சொகுசு கார் பிரிவில், மெர்சிடிஸ் பென்ஸ், பி.எம்.டபிள்யூ., போர்ஷே, லெக்சஸ் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
இருசக்கர வாகனங்களை பொறுத்தவரை, ஹீரோ, டி.வி.எஸ்., பஜாஜ் நிறுவனங்கள், ஜப்பானின், ஹோண்டா, சுசூகி நிறுவனங்கள் வந்துள்ளன. மின்சார இரு சக்கர வாகன பிரிவில், ஓலா, ஏத்தர், கிரீவ்ஸ் எலக்ட்ரிக், நியுமரோஸ் மோட்டார்ஸ் போன்றவை கலந்து கொண்டுள்ளன.
கனரக வாகன பிரிவில் அசோக் லேலண்ட், ஜே.பி.எம்., இ.கே.ஏ., மொபிலிட்டி, வோல்வோ ஐச்சர், கம்மின்ஸ் போன்றவை பங்கேற்றுள்ளன.
நேற்று ஒரே நாளில், 15க்கும் மேற்பட்ட அறிமுகங்கள் செய்யப்பட்டன. மாருதியின் முதல் மின்சார காரான இ - விட்டாரா எஸ்.யூ.வி., சுசூகி நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டரான இ - ஆக்சஸ், நாட்டின் முதல் லிக்விட் கூல்டு மேக்ஸி ஸ்கூட்டரான ஹீரோ ஜூம் 160, மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் மின்சார முன்மாதிரி கார்.
டாடா சியாரா மிட் சைஸ் எஸ்.யூ.வி., எம்.ஜி.,யின் சைபர்ஸ்டர் ஸ்போர்ட்ஸ் எலக்ட்ரிக் கார், போர்ஷே டெகான் டர்போ 2, ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஆகிய வாகனங்கள் கண்கவரும் வகையில் இருந்தன.
இந்த கண்காட்சியில், 5,100 வெளிநாட்டவர்கள் பங்கேற்கின்றனர். இதை பார்க்க, ஐந்து லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் வருவர் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.