ஆனந்த் விஹாரில் விரைவில் தானியங்கி 'ஸ்பிரே' அமைப்பு
ஆனந்த் விஹாரில் விரைவில் தானியங்கி 'ஸ்பிரே' அமைப்பு
ADDED : நவ 07, 2025 01:14 AM

விக்ரம் நகர்:காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த ஆனந்த் விஹார் பகுதியில் தானியங்கி தண்ணீர் தெளிக்கும் ஸ்ப்ரே அமைப்பை விரைவில் நிறுவ பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.
தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசுபாடு என்பது, கடந்த கால்நுாற்றாண்டு காலமாகவே பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த பிப்ரவரியில் பா.ஜ., அரசு பதவியேற்ற பிறகு, காற்று மாசுபாடு, கங்கை துாய்மை ஆகியவற்றில் உறுதியான நடவடிக்கை எடுக்குமென முதல்வர் ரேகா குப்தா அறிவித்திருந்தார்.
அந்த வகையில் லோதி சாலையில் செயல்பட்டு வரும் தானியங்கி தண்ணீர் ஸ்ப்ரே அமைப்பை, துறை அதிகாரிகளுடன் சென்று கடந்த ஜூன் மாதத்தில் மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா ஆய்வு செய்தார். அதன்பின், காற்று மாசுபாட்டுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது குறித்து அரசு ஆலோசித்தது.
தலைநகர் பகுதியில் 13 இடங்கள் அதிகபட்ச காற்று மாசுபாடு பகுதிகளாக அடையாளம் காணப்பட்டன. அவற்றில் முதல் மூன்று இடங்களான நரேலா, பவானா, ஜஹாங்கிர்புரி ஆகிய இடங்களில் நிரந்தர தண்ணீர் தெளிக்கும் ஸ்ப்ரே அமைப்புகள் நிறுவுவதற்கு முடிவு செய்யப்பட்டது.
இதற்காக டெண்டர் கோரப்பட்டு, பணிகள் துவக்கப்பட்டுள்ளன. மணிக்கு 2,000 லிட்டர் தண்ணீர் தெளிக்கும் வகையில் ஸ்ப்ரே அமைப்புகள் நிறுவப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அடுத்தகட்டமாக ஆனந்த் விஹார், விவேக் விஹார் ஆகிய இரண்டு இடங்களில் தானியங்கி தண்ணீர் தெளிக்கும் ஸ்ப்ரே அமைப்பு நிறுவுவது குறித்து பொதுப்பணித்துறையினர் டெண்டர் கோரியுள்ளனர்.
வாகனப் போக்குவரத்து காரணமாக ஆனந்த் விஹார் அதிக காற்று மாசு பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
டெண்டர் எடுக்கும் நிறுவனம் ஐந்து ஆண்டு களுக்கு அமைப்பை பராமரிக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் செலவு 4 கோடி ரூபாய். ஸ்ப்ரே அமைப்பு தினமும் காலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரையிலும் இரண்டு ஷிப்டுகளில் செயல்படும்.
தானியங்கி அமைப்பை நிறுவும் பணி, 2 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும். இந்த பணிகள் அடுத்த 30 நாட்களில் முடிக்கப்படும் என்று பொதுப்பணி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜீரணிக்க முடியாது! மாசுபாட்டைக் குறைக்க எங்கள் அரசாங்கம் இரவும் பகலும் அயராது உழைத்து வருகிறது. அனைத்தும் 'ஹாட்ஸ்பாட்'களிலும் பணியாற்றி வருகின்றன. மாசு ஏற்படுத்தும் வாகனங்கள் அகற்றப்படுகின்றன. ஆயிரக்கணக்கான மாசுபடுத்தும் வாகனங்கள் மீது வழக்குத் தொடரப்படுகின்றன. எதிர்க்கட்சி கேள்விகளை எழுப்புவார்கள். டில்லியை 10 ஆண்டுகளாக நாசமாக்கியவர்கள், மாசு புள்ளி விபரங்கள் குறையத் தொடங்கியுள்ளன என்பதை அவர்களால் எவ்வாறு ஜீரணிக்க முடியும்? மாசுபாட்டை ஒரு மந்திரக்கோலால் குறைக்க முடியாது, கடின உழைப்பின் மூலம் அது குறையத் தொடங்கியுள்ளது. டில்லி மக்கள் எங்களை ஆதரிக்கின்றனர். அதனால்தான் கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது ஒவ்வொரு நாளும் சிறப்பாக வருகிறது. மஞ்சிந்தர் சிங் சிர்சா, மாநில அமைச்சர்

